போராட்டங்கள் என்பது ஜனநாயகத்தின் சிறப்பம்சம் என்றால் ஓட்டுக்குப் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக போராட்டம் நடத்தியது பணநாயகத்தின் அவமானச் சின்னம் என்று கூறலாம்.
தேர்தல் என்றாலே வீட்டுக்கு இவ்வளவு வரும் என இல்லந்தோறும் கணக்குப்போடுவது வாடிக்கையாகிவிட்டது. அப்படிக் கணக்குப் போட்டு காத்திருந்தார்களோ என்னவோ பணம் வரவில்லை என்றவுடன் போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.
தெலுங்கானாவில் தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. தெலுங்கானால்வில் வரும் 30 ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்காக ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை எனக்கூறி பல கிராமங்களில் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
ராஜினாமாவால் வந்த இடைத்தேதல்:
தெலுங்கானா மாநிலம் ஹூஜாராபாத் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் எடலா ராஜேந்தர். இவர் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியை சேர்ந்தவர். முதல்வர் சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் இவர் சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்தார். ஆனால் சமீப காலமாகவே இவருக்கும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து விலகிய அவர், பின்னர் எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஹூஜாராபாத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு, நாளை ( அக்.,30) இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இடைத்தேர்தலில் கட்சிகளின் பிரச்சாரம் எல்லாம் ஓய்ந்துவிட்டன.
ஓட்டுக்குப் பணம் எங்களின் உரிமை!
இந்நிலையில், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்கு ஓட்டுக்கு இன்னும் பணம் வழங்கவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தினர். இதில் ஹைலைட் என்னவென்றால், ஓட்டுக்கு பணம் பெறுவது எங்களது உரிமை என்பதால், அதனை வழங்க வேண்டும் என்று கூறி, அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அதெப்படி, பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு பணம் விநியோகம் செய்துவிட்டு எங்களுக்கு வழங்காமல் போகலாம் எனக் குமுறினர். வினவக்கா மண்டலத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திணறிப்போன போலீஸார்:
ஓட்டுக்கு பணம் கேட்டு போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள் போலீஸார் திணறிப் போயுள்ளனர். இந்நிலையில், ஓட்டுக்கு பணம் கேட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதும், அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி வைத்து அனுப்பிவைத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
ஒரு வீடியாவில், ஓட்டுக்கு பணம் கேட்டு, பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், மற்றொரு வீடியோவில், ஓட்டுக்கு முழுமையான அளவு பணம் கிடைக்கவில்லை. சிறிதளவு தான் கிடைத்துள்ளது. இதனால், நாங்கள் ஓட்டுப்போட மாட்டோம் எனக்கூறியும் காட்சிகள் பதிவாகி உள்ளன.