பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடங்கி வாக்குப்பதிவு தரவுகள் வெளியிடுவது வரை பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பான தகவல்களை தாமதமாக வெளியிடுவது பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது. பொதுவாக, தேர்தலில் பதிவாகும் வாக்குகள் தொடர்பான விவரங்கள் அடுத்த நாள் காலையில் வெளியிடப்பட்டுவிடும்.
வாக்குப்பதிவு சதிவிகிதம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்:
ஆனால், இந்த முறை நான்கு நாள்கள், ஐந்து நாள்கள் கழித்து வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்பும் விதமாக உள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா சார்பில் முக்கிய கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
அதில், தேர்தல் தொடர்பாக இரண்டு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளே பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதத்தை முழுமையாக
வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
"நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்தும் தேர்தல் ஆணையம் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தாதது வருத்தம் அளிக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை, ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிந்த பிறகும், செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம்.
"மக்கள் மனதில் அச்சம் நிலவுகிறது"
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக பொதுத் தேர்தல் கருதப்படுகிறது. வாக்களிக்கும் நாளில் என்ன நடந்தது என்பதை அறிய குடிமக்களுக்கு முழு உரிமை உள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்புகளில், பத்திரிகையாளர்களுக்கு சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் ஏதேனும் இருந்தால், அவை தீர்த்து வைக்கப்படும். இது, வாசகர்களுக்குப் பிழையின்றி செய்திகளை வழங்க உதவி புரிந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேர்தல்களைப் பற்றி நாட்டு மக்களுக்குத் துல்லியமாக செய்திகள் வழங்கப்பட்டது. செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தல் ஆணையர்கள் மின்னணு ஊடகங்கள் மூலம் வாக்காளர்களிடம் நேரடியாக பேசலாம். கடந்த மூன்று கட்டங்களாக பதிவான வாக்குகளின் முழுமையான எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடாதது எங்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது.
கடந்த தேர்தல்களில் இந்த நிலை இல்லை. இந்த முன்னேற்றங்கள், தேர்தல் நேர்மையாக நடக்குமா என்ற அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துகிறது" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.