இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. இதற்கான விடை ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் மக்களவை தேர்தல் முடிவுகள் வழியாக தெரிந்துவிடும். கடந்த 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆந்திராவுக்கு குறிவைக்கும் ராகுல் காந்தி:
ஏற்கனவே, மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நாளை மறுநாள் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. முதல் மூன்று கட்டங்களில் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
வரும் 13ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்பட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. தெலங்கானாவில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், ஆந்திராவில் பலவீனமாக உள்ளது.
இந்த முறை ஆந்திராவில் குறிப்பிடத்தகுந்த தொகுதிகளை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கடப்பா தொகுதியில் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் செய்தார்.
பிஜேபிக்கு புது விளக்கம் கொடுத்த ராகுல் காந்தி:
அப்போது பேசிய அவர், "இன்று ஆந்திராவை பாஜகவின் 'பி' டீம்தான் இயக்குகிறது. பாஜக என்பது பாபு (தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு), ஜெகன் மற்றும் பவன் (ஜனசேனா நிறுவனர் பவன் கல்யாண்) ஆகியோரைக் குறிக்கிறது.
இந்த மூன்று தலைவர்களை ரிமோட் கண்ட்ரோல் வைத்து இயக்குவது பிரதமர் நரேந்திர மோடிதான். ஏனென்றால், நரேந்திர மோடி கையில் சிபிஐ, இடி (அமலாக்கத்துறை), ஐடி (வருமான வரித்துறை) ஆகியவை உள்ளது" என்றார்.
மறைந்த காங்கிரஸ் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி பற்றி நினைவுகூர்ந்து பேசிய ராகுல் காந்தி, "ராஜசேகர் ரெட்டியின் மக்கள் நலன், சமூக நீதி அரசியல் இன்று ஆந்திராவில் இல்லை. மாறாக இன்று ஆந்திராவில் பழிவாங்கும் அரசியல் காணப்படுகிறது. டெல்லியில் ஆந்திராவின் குரலாக இருந்தவர் ராஜசேகர் ரெட்டி.
டெல்லியில் ஒலிக்க வேண்டிய ஆந்திராவின் குரல் நசுக்கப்பட்டது வருத்தமான விஷயம். ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் சித்தாந்தம் ஒருபோதும் பாஜகவின் பக்கம் நிற்கக் கூடாது என்பது ஆந்திர மக்களுக்குத் தெரியும். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டியால் பாஜகவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
பிஜேபிக்கு எதிராக ஜெகன் பேச நினைத்தாலும் அதை செய்ய முடியாது என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவர் ஊழல் வழக்குகளை எதிர்கொள்கிறார்" என்றார்.