தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டே செல்கிறது. தி.மு.க.வின் மெகா கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க.ல பா.ஜ.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் உள்ள நிலையில் தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


துரைமுருகன் மாவட்டத்தில் இப்படியா?


விக்கிரவாண்டியில் நடந்த விஜய்யின் தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு விஜய் மிகப்பெரிய சவால் அளிப்பார் என்றும். விஜய் சரியான கூட்டணியை அமைத்தால் விஜய் – உதய் என்று போட்டி இருக்கும் என்றும் பலரும் கணித்துள்ளனர். இதனால், தொகுதிப்பணிகளை தீவிரப்படுத்துமாறு கட்சியினருக்கு தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.




இந்த சூழலில், தி.மு.க. தலைமையை அதிர்ச்சி அடைய வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் மேலும் மற்றும் சீனிவாசன் தலைமையில் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட ராஜாகுப்பம் ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். கருணாநிதியுடன் நெருக்கமானவரும், தி.மு.க.வின் மூத்த தலைவரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகனின் சொந்த மாவட்டமான வேலூரில் தி.மு.க.வினர் விஜய்யின் தவெக-வில் இணைந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தவெக-விற்கு தாவிய தி.மு.க. நிர்வாகிகள்:


தி.மு.க.வின் மூத்த தலைவரும், மு.க.ஸ்டாலினை காட்டிலும் அனுபவம் மிக்கவருமான துரைமுருகனின் சொந்த மாவட்டத்திலே புதியதாக தொடங்கப்பட்ட விஜய்யின் கட்சிக்கு நிர்வாகிகள் அதிருப்தி காரணமாக சென்று சேர்ந்திருப்பது கட்சித் தலைமையிலும் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ராஜா குப்பம் ஊராட்சியில் நிலவும் கட்சி அதிருப்தி காரணமாக திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராஜா குப்பம் ஊராட்சியில் திமுக மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தமிழக வெற்றிக்கழக வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.


அப்செட்டில் தி.மு.க.:


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நாகை மாவட்டம்  வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், செல்லூரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.


அதேபோல்,தர்மபுரி மாவட்டத்தில் இருந்தும் நூற்றுக்கும்  மேற்பட்ட திமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தன்.இப்படி அடுத்தடுத்து திமுகவினர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவது திமுகவினரிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் மாற்றுக்கட்சியினரை தவெக பக்கம் இழுக்க தவெக-வும் தீவிரம் காட்டி வருகிறது. தி.மு.க.வினர் தங்களது பலம் துளியளவும் குறையாமல் இருக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அந்தந்த கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.