மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்

ராகுல்காந்தியை ஓரங்கட்டிவிட்டு பாஜகவுக்கு ஆதரவாக சசி தரூர் பேசி வருவது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் பேசிய சில விஷயங்களை வைத்து பார்த்தால் அவர் பாஜக பக்கம் சாய்கிறாரா என கட்சியினரே குழப்பத்தில் இருக்கின்றனர்.

பாகிஸ்தான் விவகாரத்தையொட்டி காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பமே கிளம்பியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் விவகாரம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் விதமாக மத்திய அரசு அனைத்துக் கட்சிகளின் குழு ஒன்றை உருவாக்கியது. காங்கிரஸ் சார்பில் எம்.பி சசி தரூரிடம் பொறுப்பை ஒப்படைத்தது பாஜக. ஆனால் நாங்கள் பரிந்துரை செய்த பெயரை விட்டுவிட்டு பாஜகவே சசி தரூரை நியமித்துள்ளதாக போர்க்கொடி தூக்கியது காங்கிரஸ் தலைமை. தலைமையிடம் அனுமதி வாங்கமால் சசி தரூர் எப்படி பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துக் கொள்ளலாம் என்ற அதிருப்தி வந்தது. 

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத சசி தரூர், எனக்கு என்னுடைய மதிப்பு தெரியும், நாட்டிற்காக நான் இதனை செய்கிறேன் என வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் பாஜகவில் இருக்கிறாரா? காங்கிரஸில் இருக்கிறாரா என கட்சியினரே கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போரை நிறுத்த சொன்னதால் தான் பிரதமர் மோடி சரணடைந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி. இதற்கு சசி தரூரிடமே இருந்து எதிர்ப்பு வந்தது பாஜகவினருக்கு சாதகமாக அமைந்தது. தாக்குதலை நிறுத்த இந்தியாவை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை, மூன்றாம் தரப்பு தலையீடு எதுவும் இல்லை என ராகுல் காந்திக்கே எதிரான கருத்தை தெரிவித்து ஷாக் கொடுத்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறார்களா என கேட்ட கேள்விக்கும், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர், எனக்கு இன்னும் 4 ஆண்டுகள் பதவி இருக்கிறது என மழுப்பலான ஒரு பதிலையே கொடுத்துள்ளார்.

இதனை வைத்து அவர் பாஜக பக்கம் சாய்கிறாரா என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சசி தரூரின் அனுபவம் சர்வதேச அரசியலில் பாஜகவுக்கு சாதமாக இருக்கும் என்பதால் அவரை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்கின்றனர். அதுவும் பாகிஸ்தான் விவகாரத்தை வைத்து சசி தரூர் மீது சர்வதேச அளவில் கவனம் அதிகரித்துள்ளது. ராகுல்காந்திக்கு எதிராகவே அவர் வெளிப்படையாக பேசியுள்ளதை வைத்து இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்துள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola