MP Thirumavalavan Birthday: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் திருமாவளவன் இன்று தனது 61வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.  இவருக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில்  ”இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 


தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளாருமான உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்து குறிப்பில், “சாதிய - மதவாத - சனாதன சக்திகளுக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் - நாடாளுமன்றத்திலும் சமரசமற்ற போர்க்குரலை எழுப்பி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.  பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி #INDIA-வை காப்பதற்கான போரில் அண்ணனின் பங்களிப்பும் - செயல்பாடுகளும் வெல்லட்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், சமூகநீதிக்கான போராட்டத்தில் தீரத்தோடு களமாடும் என் அன்புச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நல்ல ஆரோக்யத்துடன் நீடூழி வாழ பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 


அதேபோல் திரைப்பட இயக்குநரும் சமூக செயல்பாட்டாளருமான பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “ வர்ண வேறுபாட்டிற்கு எதிரான அவர்ணர்களின் பன்னெடுங்கால போராட்டத்தின் தொடர்ச்சி, தன்னலம் பாராமல் தன் மக்களின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திரு தொல்.திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.