முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று, ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. 


நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்பதால் நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் இப்போது இருந்தே தேர்தலுக்கு தங்களது கட்சியினரை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேராவூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்கள்) பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறவுள்ளது. 


முதலமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதால் தென் மண்டல திமுக சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தொகுதி உட்பட 10 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், இதற்கான ஏற்பாடுகளை கடந்த சில மாதங்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. 


இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த பயிற்சி பாசறைக் கூட்டதுக்கு காலை முதலே திமுகவினர் வருகை தரவுள்ளனர். நேற்று மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சிலையை திறந்து வைத்துவிட்டு மதுரையில் தங்கிய முதலமைச்சர்,  இன்று காலை சாலை மூலம் ராமநாதபுரம் சென்று மதியம் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். 


ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் இருந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வரும் வரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுமார் 50 இடங்களுக்கு மேல் வரவேற்பு அளிக்க அம்மாவட்ட திமுக சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறும் இடத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை முகப்பு போல் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையையொட்டி, பயிற்சி பாசறை நடக்கும் இடம் உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மாவட்ட எஸ்.பி தங்கதுரை தலைமையில் சுமார் 3 ஆயிரத்து 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


ஏற்கனவே இது போன்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறை கூட்டம்  திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.