தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய வேங்கைவயல் விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள்தான் குற்றவாளிகள் என்று சிபிசிஐடி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல்:
வேங்கைவயலில் யாருமே உள்ளே போகக்கூடாது என்ற கெடுபிடி நிலவுகிறது. இது ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒரு நடவடிக்கையாக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அங்கே தங்கள் மீதே வழக்குப்பதிவு செய்துவிட்டனர் என்ற அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்கும், அவர்களை ஆற்றுப்படுத்துவதற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே அப்படி உள்ளே சென்றவர்களை அங்கே கைது செய்து மாலையில் விடுவித்துள்ளனர். இப்போது, வழக்கறிஞர்களைச் சார்ந்த பொறுப்பாளர்களை அவர்கள் தடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பாேக்கினை அரசு, காவல்துறை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பின்விளைவுகள்:
காவல்துறை இந்த பிரச்சினையில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள சூழலில், அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை விமர்சித்துள்ள சூழலில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து மீளாய்வு செய்ய வேண்டும். இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதன் மூலம் ஏற்பட உள்ள பின்விளைவுகளை கருதி, மாற்று நிலைப்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசே முன்வந்தே இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம். எங்கள் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பார் என்று நம்புகிறோம்.
பொதுசிவில் சட்டம்:
பா.ஜ.க.வின் செயல்திட்டங்களில் ஒன்று பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். அதை நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான். உத்தரகாண்டில் நடைமுறைப்படுத்துவது என்றால் அதை ஒரு சோதனை முன்னோட்டமாக பார்க்கிறார்கள் என்றுதான் கருத வேண்டியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பல்வேறு சதி முயற்சிகளைச் செய்து வருகிறார்கள். சமூக பதற்றத்தை உருவாக்கும் ஒரு நடைமுறையாக பொது சிவில் சட்டத்தை கொண்டு வரப் பார்க்கிறார்கள். இந்தியாவை மதத்தின் பெயரால் கட்டமைக்க வேண்டும் என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் எதிரானது. அதற்கான ஒரு அடித்தளமாகத்தான் இதை அவர்கள் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றுதான் நாங்கள் இதைப் பார்க்கிறோம். இது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகளை கலந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் திடீரென பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எதிராகவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அங்கு மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.