விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டியில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், சமூகநீதி போராளிகளின் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விழுப்புரம் வந்தார். அவருக்கு அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் மாவட்ட எல்லையில் புத்தகம் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து திண்டிவனத்தில் திமுக தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக மாவட்ட எல்லை கிராமமான ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். திடீர் ஆய்வில் மருத்துவமனையின் மருத்துவர்கள் வருகை பதிவு, சிகிச்சைக்கான படுக்கை வசதி, கழிவறை உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
திண்டிவனம் நகரில் மேம்பாலம் வழியாக தனியார் திருமண மண்டபம் வரை ரோட் ஷோவில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றார். பின்னர் தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் குறித்தும் ஒரே பாதையில் பயணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கிய முதலமைச்சர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து தெய்வாணையம்மாள் கல்லூரி வரை நடந்தே சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது முதலமைச்சருக்கு கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. கோரிக்கை மனுவை மாற்றுதிறனாளிகள், பெண்கள் முதியவர்கள் ஆண்கள் என பலதரபட்ட மனுக்களை பெற்றபோது பெண் ஒருவர் செல்பி எடுக்க கேட்டு கொண்டதின் பேரில் ஸ்டாலின் பெண்ணின் செல்போனை வாங்கி செல்பி எடுத்து கொண்டு பெண்ணிடம் செல்போனை கொடுத்தார்.
தொடர்ந்து விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டியில் 9 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் 21 சமூகநீதி போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மேலும், விழுப்புரத்தில் 133 கோடி மதிப்பீட்டில் 116 திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், புதியதாக 425 கோடியில் 231 முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்தல், 324 கோடியில் 35,003 பயணாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம்
இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகால கோரிக்கை எழுந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதனை தொடர்ந்து தற்போது விழுப்புரம் அருகேயுள்ள வழுதரெட்டியில் பகுதியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் 21 சமூக நீதி போராளிகளின் மார்பளவு வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம்
1952 மற்றும் 1957 ஆகிய தேர்தல்களில் வளவனூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும், 1967 ஆம் ஆண்டு அண்ணா அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராகவும் இருந்த ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் கோவிந்தசாமிக்கு ஆள் உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் உடனான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் நூலகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.