”தமிழ்நாடு, தமிழகம் என ஆளுநர் பேசுவது வெறும் சொல் விளையாட்டு அல்ல; பிரதேஷ், ராஷ்டிரா என்றாலும் நாடு தான்” என விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேசியுள்ளார்.


கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜன.05ஆம் தேதி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி “தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்று கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடங்கி நெட்டிசன்கள் வரை அனைத்து தரப்பினரும்  கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 


தமிழ்நாடு எனும் ஹாஷ்டேக்கும் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், இன்று திருநெல்வேலியில் நடைபெற்ற பொருணை நல்லிணக்க பொங்கல் விழாவில் பங்கேற்ற திருமாவளவன் தமிழ்நாடு - தமிழகம் உபயோகம் குறித்து பேசியவை பின்வருமாறு:


தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்பதற்குள் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கிற வேலை இது. ஆந்திரப் பிரதேஷ் என்கிறார்கள். பிரதேஷ் என்பதற்கும் வட மொழியில் நாடு என்பது தான் பொருள். ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் என வட மொழியை அவர்கள் பின்பற்றுகிறார்கள். 


மகாராஷ்டிரா. ராஷ்டிரம் என்றால் தேசம் அல்லது நாடு என்று தான் பொருள். இந்த தேசத்துக்கு இந்து ராஷ்டிரா எனப் பெயர் சூட்டவே விரும்புகிறார்கள். மகாராஷ்டிராவுக்குப் போய் ராஷ்டிரா என்று சொல்லக்கூடாது பாரதம் என்று சொல்லுங்கள் எனக் கூறும் துணிவு இவர்களுக்கு உள்ளதா?” என திருமாவளவன் பேசியுள்ளார்.


முன்னதாக ஆளுநரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு என்ற பெயரை ஆதரிக்கும் வகையில், ’தமிழ்நாடு வாழ்க’ என இந்தி, மலையாளம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் பதிவிட்டிருந்தார்.


மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு விருந்து அளித்துப் பேசிய கமல்ஹாசன், ”பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. மத அரசியலை எதிர்ப்பதற்காகவே காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்றோம். மதத்துக்கு எதிரான இந்த அரசியலை தடுக்க வேண்டும்.


எந்தக் கட்சியாக இருந்தாலும் மதத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. அண்ணா என்பது வெறும் பெயர் அல்ல. ஒரு உறவு. நம் நலன் சார்ந்து யார் பேசுகிறார்களோ அவர்கள் பின் தான் மக்கள் செல்வார்கள். அந்த நலன்களைத்தான் நான் தேடுகிறேன். இந்தியா சிதைந்து விடக்கூடாது என்பதற்காகவே பாரத் ஜோடா யாத்திரை நடைபெறுகிறது.


பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது. இதனை மாற்ற சொல்லுவதற்கு  ஆளுநர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதில் புவி என மாற்றச்சொன்னால் மாற்றிக்கொள்வாரா? மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்களுடைய அரசியல் என்பது மதத்துக்கானது. மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் மக்களுக்கானது” எனப் பேசியிருந்தார்.