நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு எழுதிய பாதை மாறா பயணம் நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று புத்தகத்தை வெளியிட,  முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இரண்டாவது பிரதியை கவிஞர் வைரமுத்துவும் பெற்று கொண்டனர். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி,  உதயநிதி ஸ்டாலின் உடன் எம்.பிக்கள் கனிமொழி மற்றும் ஆ.ராசா மற்றும் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். 


அதனை தொடர்ந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், “ டி.ஆர்.பாலு மாமா பயணம் எவ்வளவு உயரம்ன்னு உங்கள் எல்லாருக்கும் தெரியும். அதைவிட அவரோட வரலாறு, அவரது பயணம், அவரது உயரத்தைவிட பெரியது. அதற்கு சிறந்த எடுத்துகாட்டுதான் இந்த “பாதை மாறா பயணம்”.


2 ஆயிரம் பக்கங்கள்:


கழகத்தில் ஒரு எளிய தொண்டனாக 17 வயதில் தொடங்கி, கலைஞருடன் பயணித்து, இன்று தலைவருடைய தலைமையில் பயணித்து டி.ஆர்.பாலு மாமா பொருளாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த இரண்டு பாகத்தில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக பயணம் குறித்து அவர் சொல்ல வரும் சின்ன மெசேஜ்தான் ’பாதை மாறாத பாலு’. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் என்னை அழைத்தபோது, புத்தகத்தை என்னிடம் கொடுங்கள், நான் படித்துவிட்டு வருகிறேன் என்று தெரிவித்தேன்.


4 நாட்களுக்கு முன்னாடி ஒரு பையில் கொண்டு வந்தார். முதலில் ஒரு புத்தகத்தை கொடுத்தார், கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் பக்கம். முதல் புத்தகத்தை பார்த்தே பயந்து போயிட்டேன். இதை எப்படி மாமா நாலு நாளுல படிச்சிட்டு வர முடியும். அப்போது சிரித்துகொண்டே உன்னொரு புத்தகத்தை நீட்டினார், அது ஒரு ஆயிரம் பக்கம். கிட்டத்தட்ட இரண்டு புத்தகங்கள் சேர்த்து இரண்டாயிரம் பக்கம் கொண்ட புத்தகங்கள். 


கம்பீரம்:


அந்த இரண்டு புத்தகங்களை நானும் படிக்க துவங்கினேன். மாமாவுக்காகதான் இந்த முயற்சி. போக போக எனக்கான பாட புத்தகம்தான் இந்த புத்தகம் என்று உணர்ந்தேன். இந்த புத்தகத்தின் வெற்றி, மாமா டிஆர் பாலுவின் வெற்றி. 


நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது, அவர் அதை எதிர்கொண்ட விதம். அந்த ஆக்ரோஷத்தை அத்தனை பேரும் பார்த்து இருப்பீங்க. அன்னைக்கு இருந்த ஒட்டுமொத்த கழக தொண்டர்களும் வெளிபாடுதான் அந்த கம்பீரம், அந்த ஆக்ரோஷம். அதுதான் டிஆர் பாலு மாமா அவர்கள். 


அதேபோல், நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி ஒருவரை பார்த்து ’உனக்கெல்லாம் முதுகெலும்பே இல்லையா’ என்று நேரடியாக கேட்டார் நம்முடைய டிஆர் பாலு மாமா. 



கோபாலபுரம் நான் பிறந்து வளர்ந்த இடம். அங்கு கலைஞர் அவர்கள் நடுநாயகமாக உட்கார்த்து இருப்பார். அவரை சுற்றி அய்யா ஆற்காடு அய்யா, துரைமுருகன் மாமா, தலைவர் அனைவரும் உட்கார்ந்து அன்று நடந்த நிகழ்வுகள் குறித்து விவாதிப்பார்கள். அப்புறம் தாயாளு பாட்டி எல்லாருக்கும் சாப்பாடு கொடுப்பாங்க, கிட்டத்தட்ட ஒரு குடும்பம் மாதிரி இருக்கும். இதுதான் கழக குடும்பம்.


அந்த குடும்பத்தில் இருந்து வந்த டி.ஆர். பாலு மாமா, அவர் எழுதிய புத்தகத்தில் எத்தனை முறை கலைஞர் என்று எழுதி இருப்பார் என்று பரிசு போட்டியே வைக்கலாம். அதேபோல், நம்முடைய முரசொலி மாமாவின் பெயரையும் பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். வெவ்வேறு இடங்களில் அவர்களுக்கு நன்றி சொல்லிகொண்டே வந்து இருக்கிறார். அவர்களுக்கு மட்டுமல்ல, அவருக்கு பல்வேறு உதவிகளை பல்வேறு நபர்களுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்து இருக்கிறார். மாமாவின் இந்த உயரத்திற்கு இந்த பண்பு முக்கியமான காரணம். 


கண்டிப்பானவர்:


டிஆர் பாலு மாமா அதிகம் பேசமாட்டார், சொல்ல வேண்டியதை சரியாக ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்.  சரியோ, தப்போ அது கலைஞராக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி கண்டிப்பானவர். 


எல்லாரும் சொல்றாங்க, நம்ம தலைவர் கண்டிப்பானவர். ஒரு விஷயத்தை சொன்னா, அதை பின்பற்றி அந்த விஷயம் முடிஞ்சிருச்சா, முடிஞ்சிருச்சா.. ஏன் முடியல? ன்னு அதை பாலோ பண்ணுவதில் தலைவரை அடித்து கொள்வதில் ஆளே கிடையாது. அத்தனை கழக உறுப்பினர்களும், மூத்த அமைச்சர்களும் தலைவரை பார்த்து பயப்படுவார்கள். ஆனால் எங்கள் தலைவரே ஒருவரை பார்த்து பயப்படுவார்ன்னா அது பாலு மாமா மட்டும்தான்.” என்று கூறி உரையை முடித்து கொண்டார்.