சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று இரவு தஞ்சை மாவட்டம் களிமேடு கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்ததற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் மாநகராட்சி மாமன்ற கூட்டம் தொடங்கியது. இதில் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்த மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் மாமன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் தீர்மானங்கள் மீதான விவாதம் நடைபெற்றது.



அப்போது சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இமயவர்மன் கண்களுக்கு கருப்பு துணியை கட்டிக் கொண்டு வந்து நூதன முறையில் வலியுறுத்தினார். அப்போது மாமன்றத்தில் மேயர், துணை மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள், நியமன குழு உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என 14 பதவிகளிலும் பட்டியலின பட்டினத்தைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமியர்கள் யாரும் இடம்பெறாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளதால், உடனே அதிகார பகிர்வில் பட்டியலின மாமன்ற உறுப்பினருக்கும், இஸ்லாமிய மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் நூதன முறையில் கவனத்தை ஈர்த்தார்.


அதன்பின் பேசிய மாமன்ற உறுப்பினர் குணசேகரன், சேலம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து முடிய உள்ள நிலையில் சாலைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை அமைத்தபின் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பின்னர் பேசிய மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோவன், வார்டுகள் தோறும் முதல்வர் தொடங்கிய மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்றார்.



மேலும் திமுக, அதிமுக மாமன்ற மாமன்ற உறுப்பினர்கள் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றது. மாமான்ற உறுப்பினர்கள் வார்டுகளில் உள்ள பிரச்சனைகளை ஒவ்வொருவராக மாமன்றத்தில் எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர்களை மக்கள் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி எண்களை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மாமன்ற கூட்டத்தில் வெளியிட்டார்.


பின்னர், வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் தங்களது வார்டில் உள்ள மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாமன்ற உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார். அதன்பின் பேசிய மேயர் ராமச்சந்திரன், அதிக ஈடுபாட்டுடன் மெகா தடுப்பூசி முகாமிற்கான செயல்படும் மாமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த கூட்டத்தில் பாராட்டு அளிக்கப்படும் என்று கூறினார்.