விசிகவும் - பாமகவும் எதிரெதிர் துருவத்தில் இருந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசிக தலைவர் திருமாவளவனை பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வன்னியர் சங்க மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி இருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. 2026-ல் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள சூழலில் இந்த இரண்டு கட்சிகளின் சந்திப்பும் திராவிடக் கட்சிகளை உற்று நோக்க வைத்திருக்கிறது.

Continues below advertisement

சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இப்போதே தீவிரமாக தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டு விட்டது. மறுபுறம் திமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலை தற்போது உள்ள கூட்டணிக் கட்சிகளோடே சந்திக்கப்போகிறதா அல்லது கூட்டணி மாறுமா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது.

முக்கியமான சந்திப்பு

இச்சூழலில்தான் வட மாவட்டங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாமக மற்றும் விசிக சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழக அரசியலில் எதிரெதிர் திசையில் இந்த இரண்டு கட்சிகளும் இருந்தாலும் இந்த சந்திப்பு என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

வரும் மே 11 ஆம் தேதி பாமக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பாமகவினரும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் மாநாடு

கடந்த 12 வருடங்களாக ஒரு சில காரணங்களால் இந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்தாலும் தற்போது மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.  மாநாடு நடைபெறும் இடத்திற்கே சென்று அன்புமணி ராமதாஸ் மாநாட்டு பணிகளை கவனித்து வருகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறுவதால் சாதி மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருக்கிறார்.

வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்

இச்சூழலில்தான் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த பாமகவின் முக்கிய நிர்வாகிகள், வன்னியர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று சால்வை அணிவித்து அவருக்கு அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். அப்போது மாநாடு வெற்றிபெற திருமாவளவன் வாழ்த்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த மாதம் ராமதாஸ் வெளியிட்ட நிழல் பட்ஜெட் தொடர்பாக பாமகவினர் திருமாவளவனை சந்தித்தது பரபரப்பாக பேசப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல் வர உள்ள சூழலில் எந்த கூட்டணியில் யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் தற்போது மீண்டும் பாமகவினர் திருமாவளவனை சந்தித்திருப்பது திராவிடக் கட்சிகளை உற்று நோக்க வைத்திருக்கிறது.