தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் நடப்பாண்டு தொடக்கம் முதலே தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் வரும் சட்டமன்ற தேர்தல் மிகவும் பரபரப்பானதாக மாறியுள்ளது.
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்:
அதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் கொண்டுள்ள நடிகர் விஜய்யின் தவெக போட்டியிடுவதே ஆகும். திமுக-வும், பா.ஜ.க.வும் தனது அரசியல் மற்றும் கொள்கை எதிரி என்று மிகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள விஜய், கூட்டணிக்கும் மற்ற கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது கூட்டணியில் இதுவரை எந்த அரசியல் கட்சியினரும் இதுவரை செல்லாத நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் சில கட்சியினர் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் அஜித்:
பலமிகுந்த திமுக கூட்டணி, அதிமுக - பா.ஜ.க. கூட்டணி இவர்களை எதிர்த்து தவெக, மறுபுறம் சீமானின் நாம் தமிழர் என போட்டி மிகவும் வலுவானதாக உள்ளது. இந்த நிலையில் அடுத்த தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக நடிகர் அஜித் உருவெடுத்துள்ளார். ஏனென்றால், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய்க்கு முதல் தலைமுறை வாக்குகள், பெண்கள் வாக்குகள் கணிசமான அளவு பதிவாகும் என்றே கணிக்கப்படுகிறது.
இதனால், விஜய்க்கு நிகராக தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்தின் பக்கம் அரசியல் கட்சிகளின் பார்வை திரும்பியுள்ளது. தனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அரசியலுக்கு வரும் எண்ணமும் தனக்கு இல்லை என்று மிகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள அஜித் தனது கவனத்தை தற்போது கார் ரேஸ் பக்கம் திருப்பியுள்ளார்.
திமுக, அதிமுக:
விஜய்க்கு எதிராக வாக்குகளை பெற வேண்டுமென்றால் அதற்கு அஜித் ரசிகர்கள் வாக்குகள் மிகவும் முக்கியம் என்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்துள்ளன. இதன் எதிரொலியே கார் பந்தயத்தில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் அஜித்திற்கு திமுக-வின் அமைச்சர்களும், கூட்டணி கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் ஒரு பக்கம் என்றால் மறுமுனையில் அதிமுக தலைவர்கள் சில ஆண்டுகளாகவே அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்து வருகின்றனர். ஏனென்றால் ஜெயலலிதாவிற்கு மிகவும் விருப்பமான ஒரு நபர் அஜித் என்பதே ஆகும். பா.ஜ.க.வுடன் கைகோர்த்து விட்டதால் இனிமேல் அதிமுக - தவெக கூட்டணி உருவாக வாய்ப்பு என்பதே இல்லை என்பது தீர்மானம் ஆகிவிட்டது. இதனால் அதிமுக-விற்கும் வில்லனாக மாறியுள்ள விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களை தங்களுக்கு கேடயமாக பயன்படுத்த அவர்களும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக வியூகம்:
பலமிகுந்த திமுக, அதிமுக கூட்டணியினர் ஒரு புறம் இவ்வாறு இருக்க, திரையுலகில் அஜித்தின் நேரடி போட்டியாளரான விஜய்யின் ரசிகர்கள் தற்போது அஜித்தின் ரசிகர்களின் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். இதன் காரணமாகவே பல இடங்களில் தல - தளபதி, விஜய் - அஜித் இணைந்தது இருக்கும் போஸ்டர்கள் தொடர்ந்து அதிகமாக காணப்பட்டு வருகிறது.
மேலும், வழக்கமாக அஜித் படங்கள் திரையில் வெளியானால் சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக சில விஜய் ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்திற்கு அதுபோன்ற விமர்சனங்கள் மிக மிக குறைவாகவே விஜய் ரசிகர்களிடம் காணப்பட்டது. அதேசமயம் சில அரசியல் கட்சியினர் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் அஜித் பற்றியும், அஜித் படம் பற்றியும் மிகவும் மோசமாக அவதூறு பரப்பி இதன் மூலம் ஆதாயம் தேட முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
வெளிப்படையாகவே எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று அஜித்குமார் கூறிவிட்டாலும் அடுத்த தேர்தலில் முதலமைச்சர் நாற்காலியில் அமரப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அஜித் ரசிகர்கள் உருவெடுத்துள்ளனர். இனி வரும் நாட்களில் அஜித் ரசிகர்களை கவர அரசியல் கட்சிகளின் வியூகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.