கோவை காந்திபுரம் பகுதியில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு அங்கன்வாடி மையம் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கன்வாடி மைய பொறுப்பாளர்களிடம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்களையும் அவர் பார்வையிட்டார்.


இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் சிறப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பல இடங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டிட வசதி மோசமாக உள்ளதால் அங்கன்வாடி மையங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவற்றை சீரமைப்பதற்காக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியினை பயன்படுத்தி வருகிறோம். இதை வெறும் கட்டிடமாக மட்டும் வைக்க கூடாது என்பதற்காக பல்வேறு வண்ண சித்திரங்கள் வரையப்பட்டு இனிமையான வகுப்பறை சூழலை உருவாக்கி உள்ளோம்.


இவை மட்டுமின்றி அடுத்தடுத்த அங்கன்வாடி மையங்களில் சோலார் தகடு பொருத்தப்பட்டு, பாதுகாப்பான குடிநீர் உள்ளே வழங்கப்படுவது, விளையாடுவதற்கான மைதானம் ஆகியவற்றை உருவாக்கி மாதிரி அங்கன்வாடி மையங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அங்கன்வாடி மையங்களுக்கு அரசு அதிக கவனம் கொடுத்து, குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் வரும் இடம் என்பதால் நல்ல சூழலை இங்கு உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.


கர்நாடக தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுடைய ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கான காரணங்களை நிச்சயமாக கட்சி ஆராயும். மக்களுடைய நம்பிக்கை பெறக்கூடிய வகையில் செயல் திட்டங்களை நிச்சயம் உருவாக்கும். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்புகளை பூரணமாக நிறைவேற்றுகின்ற வகையிலும், மக்களுடன் நெருக்கமான அணுகுமுறையையும் ஏற்படுத்த, கர்நாடக தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்தக்கூடிய விஷயமாக பார்க்கிறோம். தோல்விக்கு ஒரு குறிப்பிட்ட காரணம் என எந்த கட்சியாலும் சொல்ல முடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.


முதலமைச்சர் ஒரு கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஒருமுறை தேர்தலில் ஒரு கட்சி தோல்வி அடைந்துவிட்டால், அந்த மாநிலத்திலிருந்து கட்சி துடைத்தெரியப்படும் என்றால் திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டில் இருந்து எத்தனை முறை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் யோசிக்க வேண்டும். இப்போதும் கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக இருக்க பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளித்திருக்கின்றனர். அதனால் திராவிட நிலப்பரப்பு என்பது இவரை தவிர மற்ற மாநிலத்தில் உள்ள முதல்வர்களே ஒத்துக்கொள்ளாதபோது இதை ஒரு அலங்கார வார்த்தை என மட்டுமே கருத முடியும். காங்கிரஸ் ஏன் எல்லா மாநிலங்களிலும் தோற்றது என்பதை ஆராய்ந்து அவர்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும். தேர்தல் என்றால் வெற்றி, தோல்வி என்பது அரசியல் கட்சிக்கு சாதாரணம். கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவை சுத்தமாக புறக்கணித்து விட்டார்கள் என சொல்ல முடியாது. பாஜகவின் ஆதரவு வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. தோல்விக்கான விஷயங்களை ஆராய்ந்து மீண்டும் மக்களின் ஆதரவை கண்டிப்பாக பெறுவோம்” எனத் தெரிவித்தார்.


பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தோல்வி அடைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், “தொகுதியில் கிடைக்கும் வெற்றி தோல்வியை மட்டுமே வைத்து ஒருவரின் தேர்தல் அணுகுமுறையை அளவிட முடியாது. கட்சிக்கு அவர்கள் ஆற்றி இருக்கக்கூடிய முக்கியமாகும். சிறந்த தலைவர்களாக இருந்தாலும் தேர்தல் களத்தில் அவர்கள் தோற்று இருப்பார்கள். அதற்காக அவர்கள் தேர்தலில் வழிநடத்தக் கூடாது என்பது என ஒன்றும் இல்லை. தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அண்ணாமலை அவர்கள் அவரது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். இருந்தும் மக்கள் காங்கிரசிற்கு வாய்ப்பு அளித்துள்ளனர். எனவே அவருடைய சொந்த பங்களிப்பு தனிப்பட்ட பங்களிப்பு என இதில் எதையும் பார்க்க முடியாது. இதை ஒட்டுமொத்த கட்சிக்கான பங்களிப்பு என்று தான் பார்க்க வேண்டும்.


பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக தேர்தல் தோல்வி எந்த விதத்திலும் எங்களுக்கு பிரச்சனையாக இருக்காது. கடந்த முறை ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அடுத்த 6 மாத காலங்களில் வந்த தேர்தலில் பாஜக அங்கு ஜெயித்தது. எனவே, மத்தியில் நல்ல அரசாங்கத்தை நேர்மையான அரசாங்கத்தை கொடுத்து உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவிற்கு கிடைத்திருக்கக்கூடிய முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில், மீண்டும் பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள். பிரதமர் மோடிக்கு எதிராகவோ அல்லது சமமாகவே இன்னொரு பிரதமர் என்பது வரக்கூடிய காலத்தில் இல்லை. எனவே பாரதிய ஜனதா கட்சி அடுத்த முறை ஆட்சி அமைப்பது 100 சதவீதம் உறுதி. மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு பாஜகவிற்கு கட்டாயம் மக்கள் ஆதரவளிப்பார்கள்” எனக் கூறினார். 


பாஜகவோடு கூட்டணியில் இருப்பதை அதிமுக பரிசீலிக்க வேண்டும் என திருமாவளவன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, ”திருமாவளவன் சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வரும் திமுக கூட்டணி கட்சியில் இருந்து வெளியேற வேண்டும். எந்த ஒரு பட்டியல் இன பிரச்சனைக்கும் அங்கு இருந்து கொண்டு அவரால் தீர்வு காண முடியவில்லை. எனவே அங்கிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிலளித்தார்