பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற திருப்பூர் பல்லடம், திருநெல்வேலி பாஜக பொதுக்கூட்டங்களுக்கு திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதனால் தனது பிறந்த நாளையொட்டி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் புலம்பி தீர்த்திருக்கிறார். ’தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது’ என்று கூறியிருக்கிறார்.
தோல்வி பயம் பிரதமரின் முகத்தில் தெரியவில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கியுள்ளதால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. திமுக ஆதரவு ஊடகங்கள் எடுத்த கருத்துக் கணிப்பிலேயே பாஜக மட்டும் 18 சதவீதததிற்கும் மேல் வாக்குகளைப் பெறும் என்று தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கலக்கத்தால் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார். திருநெல்வேலி பாஜக பொதுக்கூட்டத்தில் லட்சணக்கான மக்கள் முன்பு பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக தடைபோட்டு வருவதை சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ’எந்தத் திட்டத்திற்கு திமுக அரசு தடையாக இருந்தது?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எல்லாவற்றையும் பிரதமரே சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிலம் கையகப்படுத்தி கொடுப்பதில் திமுக அரசு செய்து வரும் தாமதத்தால், கோவை விமான நிலைய விரிவாக்கம் தடைபட்டு நிற்கிறது. சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை திட்டத்திலும் தமிழக பகுதியில் ஏற்பட்டு வரும் தாமதத்திற்கு திமுக அரசே காரணம். கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்களின் நலனுக்கான நவோதயா பள்ளிகள் திட்டத்தை திமுக அரசு ஏற்க மறுக்கிறது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய திமுக அரசு மறுத்துள்ளதால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே திட்டங்கள், துறைமுக திட்டங்கள் என பல்வேறு உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு திமுக அரசு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதுபற்றி நாடாளுமன்றத்திலேயே மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அரசியல் ரீதீயாக வேறுபட்டிருந்தாலும் அரசு நிர்வாகம் என்று வரும்போது மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணக்கமாக செல்ல வேண்டும். அப்போதுதான் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். ஆனால், ஊழல், குடும்ப ஆட்சிக்கு தடையாக மத்திய பாஜக அரசு இருக்கிறது என்பதால், மத்திய அரசு எதை செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை கொள்கையை திமுக கடைப்பிடித்து வருகிறது.
மக்களை ஏமாற்றுவதற்காக பிரதமர் வீட்டுவசதி திட்டம், குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் என மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது. திமுகவின் பொய் புரட்டுகள், ஏமாற்று வேலைகள் இனியும் எடுபடாது. மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் திரும்ப திரும்ப மத்திய அரசு மீது திமுக குறை சொல்கிறது. மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதில் பல தடைக்கற்கள் இருந்தாலும், தமிழ்நாட்டு மாணவர்கள் நலனுக்காக, திமுக அரசின் எதிர்ப்பையும் மீறி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பாஜக அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. மூன்றாவது முறையாக மோடி அரசு அமைந்ததும் மதுரையில் பிரம்மாண்டமாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.