ஆலோசனைக் கூட்டம்

 

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் ரயில்வே திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் மதுரை ரயில்வே நிலைய அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமாா், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் , சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பாஜகவுடன் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கூட்டணி தெரிந்துவிடும் - மதுரையில் ரவீந்திரநாத் பேட்டி.

 

 

ரவீந்திரநாத் செய்தியாளர் சந்திப்பு 

 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேசியபோது,"சென்னை- போடி ரயில் சேவை நாள்தோறும் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி பாஜக பாதயாத்திரை நிகழ்ச்சிக்காகவே வருகை தந்தார். நாங்கள் ஒன்றாக தான் இருக்கிறோம் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் கூட்டணி தெரிந்துவிடும். வரும் நான்காம் தேதி பிரதமர் மீண்டும் வருகிறார். அதற்குள் நல்ல முடிவுகள் வரும் பாரத பிரதமர் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை இணைந்து செய்கிறோம். சீட்டு ஒதுக்கீடு சம்பந்தமாக கழகத்தின் முன்னோடிகள் முடிவெடுப்பார்கள். தேனியில் மீண்டும் போட்டியிடுவீர்களா? தினகரன் கேட்பதாக தகவல் வருகிறதே? தேர்தல் தேதி அறிவிக்கட்டும் சொல்கிறேன். என்னை பொருத்தவரைக்கும் தேனி மற்றும் தென் மாவட்டத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்க  ஆசைப்படுகிறேன்” என்றார்.

 

மதுரை ரயில்வே மைதானத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை என தெற்கு ரயில்வே மேலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி.


முன்னதாக  செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியபோது, "மதுரை ரயில்வே மைதானத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை என தெற்கு ரயில்வே மேலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 6 மாதமாக நடத்தப்பட்ட போராட்டத்தின் வாயிலாக மதுரை ரயில்வே மைதானம் காப்பாற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக எழுப்பப்பட்ட 18 கோரிக்கைகளுக்கு மேலாளர் பதிலளித்துள்ளார்.  தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்பட்ட ரயில் இனி 3 முறை ரயில் இயக்கப்படும்" எனக் கூறியுள்ளனர்.