மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தன் ஆரம்ப கால அரசியல் குறித்தும், தனது பயணம் குறித்தும் தந்தி டிவியில் ராஜபாட்டை நிகழ்ச்சியில் பேட்டி அளித்திருந்தார். முன்பு எடுக்கப்பட்ட அந்த பேட்டியில் பல முக்கியமான, கவனிக்க வேண்டிய விசயங்களை அவர் பகிர்ந்திருந்தார். இதோ அவை...




 


எனது குடும்பம் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். 1952 தேர்தலின் போது நான் சிறுவன். மாட்டுப்பெட்டிக்கு ஓட்டு போடுங்கள் என சிறுவர்களை அழைத்துச் சென்று ஓட்டுக் கேட்டவன் நான். அப்போ எனக்கு 7 வயசு தான் அப்போது இருக்கும். பெருந்தலைவர் காமராஜர்,1 954 ல் முதல்வராக பொறுப்பேற்ற சமயம், முதல் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில் எங்கள் வீட்டில் வந்து தங்கினார். மதிய உணவு, பெரிய விருந்து வைத்தோம். மாடியில் அவர் தங்க ஏற்பாடு செய்திருந்தோம். படுக்கைகள் அவர் கொண்டு வந்திருந்தார். நாங்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த வெல்வெட்டு ஜமுக்காலம் எல்லாம் அவர் பயன்படுத்தவில்லை. 


காமராஜர் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான் எங்கள் வீட்டில் அப்போது கழிப்பறையும், குளியலறையும் கட்டினோம். குளித்துவிட்டு அவர் மாடிக்கு போகும் போது, சட்டையை கழற்ற போனார். கேடி.கோசல்ராம் அவரை மறைத்தார். ‛காமராசர்... இந்த வீட்டு பையனாம்... உங்க கூட போட்டோ எடுக்கணுமாம்...’ என்றார். அவர் சட்டையை கழற்றாமல் எனக்காக போட்டோவுக்கு ஃபோஸ் கொடுத்தார். ஆனால் அந்த போட்டோவை என்னால் பராமரிக்க முடியாமல் போனது. கருணாநிதி எங்கள் வீட்டிற்கு வந்து உணவருந்தி, ஓய்வெடுத்து சென்றார். 2006ல் சங்கரன்கோவில் வந்த ஜெயலலிதா, எனது வீட்டிற்கு வந்து என் தாயை பார்த்து நலம் விசாரித்துச் சென்றார். 


பள்ளி முடித்து கல்லூரி போனப்போ, நெல்லை தாமிரபரணி ஆற்றில் நாவலர் பேச்சை கேட்டேன். அதை கேட்டு ஈர்க்கப்பட்டேன். அண்ணாவை புத்தகம் படித்து அறிந்தேன். திராவிட இயக்கம் மீது எனக்கு ஈர்ப்பு அதிகமானது. பராசக்தி வசனத்தை பேசி பழகினேன். கல்லூரியில் திமுக மாணவரணி இயக்கத்தில் இணைந்தேன்.  அன்று வழக்கறிஞராக இருந்த ரத்னவேல் பாண்டியன் தான் நான் அரசியலுக்கு வர முக்கிய காரணம்.  1965ல் பக்கத்து ஊரில் நடந்த கூட்டத்தில், நான் பேசினேன். அங்கு வந்திருந்த ரத்னவேல் பாண்டியன், என்னை தொடர்ந்து பேசுமாறு கூறினார். கூட்டம் முடிந்ததும், என்னை அழைத்து பேசினார். என்னை பற்றி விசாரித்தார். 


என் சைக்கிளை வேறொருவருடன் கொடுத்து அனுப்பிவிட்டு, என்னை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டார். நான் சட்டக்கல்லூரி சென்ற போது, அவரை பார்த்தேன். கல்லூரி முடிச்சிட்டு வந்து என்னிடம் சேர்ந்து விடு என்றார். சட்டம் முடித்துவிட்டு அவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அப்போது அவர் கட்சியில் மாவட்ட செயலாளர். மாவட்ட மாணவர் திமுக செயலாளராக என்னை ஆக்கினார். அவர் செல்லும் கட்சி கூட்டங்களுக்கு என்னை அழைத்துச் சென்றார். 




என்னை ஒரு மணி நேரம் பேசச் சொல்லிவிட்டு, கடைசி 5 நிமிடங்கள் மட்டும் அவர் பேசுவார். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக அப்போது இருந்தது. அங்குள்ள நிர்வாகிகளிடம் எல்லாம், என்னை நெருக்கமாக்கினார். பின்னாளில் அவர் பெரிய பொறுப்புகளுக்கு எல்லாம் போனார். உச்சநீதிமன்ற நீதிபதியானார். எங்க ஊர் ஊராட்சி தலைவரானேன். அது தான் என் முதல் கட்சி பொறுப்பு. நீ ஜெயித்து அண்ணா படத்தை அங்கு திறக்க வேண்டும் என்று அண்ணாச்சி கூறியதால் தான் போட்டியிட்டேன். 


தேர்தலில் நான் தோற்கும் போதெல்லாம் என் தாய் எனக்கு போன் செய்து, என்னை தேற்றுவார். விடு திருஷ்டி போகட்டும் என்பார். என் அப்பா மனஉறுதி படைத்தவர். அவர் வழியில் என் தாயும் மன உறுதியோடு இருந்தார். திமுகவில் இருந்து எம்ஜிஆர்.,யை நீக்கும் அறிவிப்பு வெளியான போது, சேப்பாக்கல் விடுதி வெளியே நின்றேன். ஜி.விஸ்வநாதன் வெளியே வந்து வருத்தம் தெரிவித்தார். அதன் பின் நாவலர் வந்தார். ‛நீக்கியாச்சுய்யா...’ என்று அவரும் கூறினார். கட்சி போய்விடுமே என்ற அதிர்ச்சியில் நான் உள்ளே சென்றேன். ஏற்கனவே என் அப்பாவை உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அந்த அதிர்ச்சியில் இருந்தேன். இது இன்னொரு அதிர்ச்சியாக இருந்தது. 




10 ம் தேதி நீக்கினார்கள், 11ம் தேதி என் தந்தைக்கு கேன்சர் என்று கூறிவிட்டார். என் அப்பாவிடம் கூறவில்லை. அப்போது காளிமுத்து எம்.ஜி.ஆர்.,யிடம் போய்விட்டார். அப்போது தான் என் அப்பாவிடம் கூறினேன். ‛சரிப்பா... எல்லோரும் போறாங்கல்ல, இனிமே தான் கலைஞருக்கு உன் அருமை தெரியும்’ என்றார் என் தந்தை. கருணாநிதியின் பெயரைச் சொன்னால் அடித்துவிடுவேன். அந்த அளவிற்கு அவர் மீது பற்றாக இருந்தேன். 


நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். முதல்வர் எம்ஜிஆர் வந்துவிட்டார். மோகன்ரங்கம் எனது நண்பர், அதிமுகக்காரர். என்னை எம்ஜிஆரிடம் அவர் கூறினார். நான் மரியாதைக்கு எழுந்து நின்றேன். மூன்று ஸ்டெப் நடந்து வந்து, எனக்கு கைகொடுத்தார் எம்ஜிஆர். சமீபத்தில் ஒரு தகவல் கிடைத்தது. எம்ஜிஆர்., உடன் நான் வர வேண்டும் என அவர் விரும்பியதாகவும், அவ்வளவு ஆசைபட்டதாகவும், அவருடன் இருந்த நெருக்கமான ஒருவர் சமீபத்தில் என்னிடம் கூறினார். அதை கேட்டு கண் கலங்கிவிட்டேன். காலம் கடந்துவிட்டது , இனி அதைப்பற்றி நினைப்பதில் பயனில்லை. சமீபத்தில் தான் எனக்கு இந்த விசயமே தெரியவந்தது 


பிரபாகரனுடன் வன்னிக்காட்டில் இருக்கும் போது, எம்ஜிஆர்., செய்ததை அவ்வளவு மெச்சி கூறினார். கிட்டு என்னிடம் எம்ஜிஆர் பற்றி கூறினார். அவ்வளவு உதவிகளை அவர் செய்துள்ளார். நானே முதல்வராக இருந்திருந்தால் கூட ஈழத்திற்கு அவ்வளவு செய்திருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு தளம் அமைத்து கொடுத்தது எம்ஜிஆர், காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்தது அவர், ராஜீவ் காந்தி பணம் மறுத்த போது, நான் இருக்கிறேன் என் ரூ.4 கோடி கொடுத்து உதவியவர் எம்ஜிஆர். தனிஈழம் அமைய அத்தனை உதவிகளை செய்தது எம்ஜிஆர் தான், என, வைகோ அந்த பேட்டியில் கூறியுள்ளார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண