தேர்தல் என்றாலே கூட்டணி என்பார்கள். கூட்டணி இல்லை என்றாலே அது உள்ளாட்சி தேர்தல். சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வந்தால் , ஏன் வருவதற்கு முன்பே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவதும், கூட்டணி அமைக்க குழுக்கள் அமைக்கப்படுவதும், கூட்டணி பேரம் நடப்பதும் நாம் அறிந்த ஒன்றுதான். இது ஒவ்வொரு தேர்தலில் நடக்கிறது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில், அவ்வாறு நடப்பதில்லை. அதற்கு ஆளமான பல காரணங்களும் உள்ளன. யாரும் திறக்காத அந்த பக்கத்தை உங்களுக்காக திறக்கிறோம். 




சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதிலிருந்து, கூட்டணியை அழைத்துச் செல்வது வரை, ஏன்... கூட்டணிக்கு வருகிறோம் என லெட்டர் பேஃட் கட்சிகள் வரிசை கட்டி வந்தால் கூட, அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்வது வரை எல்லாமே, ஒரே அரவணைப்பிசம் இருக்கும். காரணம்... அந்த இடத்தில் வெற்றி வேண்டும்; வெற்றி மூலம் ஆட்சிகட்டில் அமர வேண்டும் என்பது மட்டும் தான். ஒரு கட்சியின் தலைமையோ அல்லது, தலைமை முன்மொழிபவரையோ ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்கிற அக்கறை அந்த தேர்தலில் இருக்கும். 


இதே பார்மட் தான், நாடாளுமன்ற தேர்தலிலும். அதில் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கும். அந்த வெற்றி கண்டிப்பாக மாநில கட்சிக்கு பெரிய உதவியாக இருக்காது. ஆனால், மத்திய ஆட்சியில் தன் வலிமையை  நிரூபிக்கவும், ஆதர சக்தியாக காட்டிக் கொள்ளவும் அது உதவும் என்பதால், நாடாளு மன்றத் தேர்தலிலும் அரசியல் கட்சிகள் அவ்வளவு அக்கறை காட்டுவார்கள். ஆனால் பாருங்க... இந்த உள்ளாட்சி தேர்தல் வந்தால் மட்டும் யாருமே கண்டுகொள்வதில்லை. காரணம், அதனால் பயனடையப் போவது, கடைகோடியில் இருக்கும் யாரோ ஒரு தொண்டன். எவனோ ஒருவனுக்காக நாம் என மெனக்கெட வேண்டுமா என்கிற மிதப்பும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம், 


அதனால் தான், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் நடக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை போல, உள்ளாட்சி தேர்தலில் நடப்பதில்லை. முடிந்தவரை தனித்திருங்கள், விலகியிருங்கள் பார்மட் தான் உள்ளாட்சி தேர்தலில் நடக்கிறது. சட்டமன்றத்தில் நடக்கும் குறைந்தபட்சம் பேரம் கூட உள்ளாட்சி தேர்தலில் நடப்பதில்லை. ‛அந்தந்த மாவட்ட நிர்வாகிகள்... கூட்டணியை இறுதி செய்துவிடுங்கள்...’ என்கிற தலைமைகள். கேட்டால், ‛அவர்களுக்கு தானே... அங்குள்ள நிலைமை தெரியும்...’ என பதில் வரலாம். சரி, சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும், அதே போல வேட்பாளர்களை மாவட்ட நிர்வாகிகளே தேர்வு செய்ய அனுமதிப்பார்களா? காரணம், அவர் யாரையாவது தேர்வு செய்து, வெற்றி பறிபோய் விடுமோ என்ற பயம். அதாவது தங்கள் வெற்றி பறிபோய் விடுமோ என்கிற பயம். அதே உள்ளாட்சி தேர்தல் என்றால், அதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அதன் வெளிப்பாடு தான், கூட்டணி பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டாத நிலை. 




அவ்வளவு முக்கியத்துவம் இல்லாதவனா, கடைகோடியில் இருக்கும் தொண்டன்? அவன் வெற்றிக்கு ஒரு கூட்டணியை கூட உங்களால் உறுதி படுத்த முடியாது என்றால், அவனிடம் மட்டும் நீங்கள் உங்கள் வெற்றிக்கான உழைப்பு எதிர்பார்க்கலாமா? இதில் என்ன நியாயம் இருக்கிறது? ஒரு வார்ட்டில் 400 ஓட்டுகள் கூட இருக்கும். அங்கு வெற்றியை தீர்மானிக்கும் ஓட்டு, ஒரு ஓட்டாக கூட இருக்கலாம். அங்கு கூட்டணி இல்லாமல், ஒரே கூட்டணியில் இருந்த இரு வேறு கட்சியின் வேட்பாளர் போட்டியிடும் போது, ஓட்டு பிரிந்து யாராவது ஒருவர் தோற்கலாம். சட்டமன்ற தேர்தலில் அந்த ஓட்டு பிரியக்கூடாது, நாடாளுமன்ற தேர்தலில் அந்த ஓட்டு பிரியக்கூடாது, ஆனால் உள்ளாட்சி தேர்தலில் அதைப் பற்றி கவலையில்லை என்றால், யார் சுயநலவாதி என்கிற கேள்வி எழுகிறது. 




யாரோ ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைத்துவிட்டு, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் நிலை தான் நீடிக்கிறது. வெற்றி பெற்றால், அந்த வெற்றியை சொந்தம் கொண்டாடுவதும் தான் இதுவரை நடக்கிறது. உள்ளூர் செல்வாக்கை நிரூபிக்கும் தேர்தல் தான் உள்ளாட்சி தேர்தல். சுயேட்சைகள் போட்டியிடும் ஊராட்சி தேர்தலை தவிர, கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடும் பிற உள்ளாட்சி தேர்தல்கள் வரை அவர்கள் சுய செல்வாக்கு தான் அவர்கள் வெற்றியை தீர்மானிக்கிறது என்றால், பிறகு எதற்கு கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும்? கட்சிக்கு அந்த வெற்றி தேவைப்படுகிறது... ஆனால், அந்த வெற்றிக்கான தீவிரம் தேவைப்படுவதில்லை. அதுவே உள்ளாட்சிக்கும்-ஆட்சிக்குமான வித்தியாசமாக இருந்து வருகிறது. பாவம்... உங்களுக்காக உழைத்து, உழைத்து கடைகோடியில் காத்துக் கொண்டிருப்பவனுக்கு கடைசி வரை, உங்கள் ஆதரவு கிடைப்பதில்லை. எந்த கட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல... எந்த உள்ளாட்சி தேர்தலும் அதற்கு விதிவிலக்கல்ல... விடாது கருப்பு இம்முறையும் தொடர்கிறது! 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண