உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்களை அங்குள்ள அரசியல் கட்சிகள் அறிவித்து வரும் நிலையில், பாஜக சார்பில் போட்டியிட நிறுத்தப்படும் வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் முதல்வரும், பாஜகவைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத் சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ளார். அதில் அவர், பாஜக உட்பட ஒவ்வொரு அரசியல் கட்சியும் வெற்றி வாய்ப்பையும், அனைத்து சமூகங்களில் பிரதிநிதித்துவத்தையும் மனதில் கொண்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்திருப்பதாகக் கூறியுள்ளார். 


சமீபத்தில் வட இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அது பாஜகவின் தவறு அல்ல எனவும், முஸ்லிம்களுக்கு பாஜகவின் மீதும், அதன் கொள்கையின் மீது நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்தார். 


`பாஜக மேல் எந்தத் தவறும் இல்லை. முஸ்லிம்களுக்கு எங்கள் மீதும், எங்கள் கொள்கையின் மீதும் நம்பிக்கை இல்லை. தேர்தலில் போட்டியிட யாரேனும் விரும்பினால், கட்சி அதனைப் பரிசீலனை செய்யும்’ என அவர் கூறியுள்ளார். 



`பாஜக உள்பட ஒவ்வொரு அரசியல் கட்சியும் வேட்பாளர்களைப் போட்டியிட நிறுத்தும் போது இரண்டு விவகாரங்களை மனதில் கொண்டு தேர்ந்தெடுக்கின்றனர். அவை வெற்றி வாய்ப்பும், அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவமும் ஆகும்’ என அவர் பாஜக ஏன் முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தவில்லை எனக் கேட்கப்பட்ட போது பதிலளித்துள்ளார். 


ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியோடு கூட்டணி வைத்தது குறித்து கேட்கப்பட்ட போது, `அரசியலில் ஏற்படும் எந்தவொரு சாத்தியத்தையும் நீக்கிவிட முடியாது. அவை அந்த நேரங்களில் தோன்றும் சூழல்களைப் பொருத்து உருவாகின்றன’ எனக் கூறியுள்ளார். 


தொடர்ந்து அவரிடம் சுவாமி பிரசாத் மௌர்யா உள்பட பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறுவது குறித்து கேட்கப்பட்ட போது, அனைவருக்கும் தங்கள் எண்ணத்தின் படி முடிவெடுக்கும் உரிமை இருப்பதாகவும், அவர்கள் கட்சியில் இருப்பதும், வெளியேறுவதும் அவரவர் முடிவு எனவும் கூறியுள்ளார். 



`கலவரத்தைத் தூண்டுவோரும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோரும் சமூக நீதிக்காக எதையும் செய்ய மாட்டார்கள். சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவை நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் சமூக நீதியின் பிரதிநிதிகளா? கொள்கைக்காக அரசியல் செய்வோர் நீண்ட காலம் அரசியலில் நிலைத்து இருப்பார்கள். தனிநலன்களுக்குத் தேச நலன்களை விட அதிகம் முக்கியத்துவம் வழங்குவோருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 


வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல், உத்தரப் பிரதேசத்தின் 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், வாக்குப்பதிவு வரும் மார்ச் 10 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.