உத்தரப் பிரதேச மாநிலத்தின் கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் கடந்த மே 30 அன்று பசுக்களை ஆதரவின்றி கைவிடுவோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 


மேலும், விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு மேற்கொள்ளப்படும் எனவும் தரம்பால் சிங் கூறியுள்ளார். தெருவோர மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்கவும் கோரி சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங், `யோகி ஆதித்யநாத் அரசு பசு மாடுகளைக் கைவிடும் விவசாயிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்கான சட்டத்தை அமல்படுத்தியுள்ளது’ எனக் கூறியுள்ளார். 



`விவசாயிக்கும், கறிக்கடைக்காரருக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் விவசாயியைக் கவனித்துக் கொள்வோம். கறிக்கடைக்காரரை அல்ல’ எனக் கூறியுள்ளார் தரம்பால் சிங். மேலும், பசு மாடுகளுக்கான கோசாலைகள் தன்னிறைவு பெற்றதாக மாறுவதற்கான பணிகளை மேற்கொண்டு மாநில அரசு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


`பசுக்களுக்கான சரணாலயம் அமைக்கத் திட்டமிட்டோம். பசுக்களின் பாதுகாப்புக்காக முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். `காட்டு விலங்குகள் தான் சரணாலயத்தில் வாழும்.. பசு என்பது நமது தாய்.. காட்டு விலங்கு அல்ல’ என முதல்வர் கூறியுள்ளார். பசுவின் பால், நெய், தயிர், சாணம் ஆகியவை நல்லவை. பசு மாட்டின் சாணத்தில் கடவுள் லக்‌ஷ்மி வாழ்கிறார். பசு மாட்டின் சிறுநீரில் கங்கா வாழ்கிறார். பசுக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதோடு, அவற்றைப் பாதுகாக்கிறோம். அவை தெருவோர விலங்குகள் அல்ல.. தெருவோர விலங்குகளுக்கும், கைவிடப்பட்ட விலங்குகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது’ என்று உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பேசியுள்ளார் அமைச்சர் தரம்பால் சிங். 





 


தொடர்ந்து அவர், `பசு மாடுகளைக் கைவிடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பசு மாட்டின் பால், சாணம் ஆகியவற்றை அரசே வாங்குவதற்காக திட்டமிட்டு வருகிறோம்’ எனக் கூறியுள்ளார். மேலும் பசு சாணத்தில் இருந்து எரிவாயு உருவாக்கும் நிலையங்களை மாநில அரசு உருவாக்குவதற்காகவும் திட்டமிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத் இந்த விவகாரம் குறித்து பேசிய போது, பாஜக அரசு பசுக்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை எனக் கூறியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி தரும் போது, பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தீர்வு காணப் போவதாகக் கூறியிருந்தார். எனினும், இந்தப் பிரச்னையைத் தீர்க்காமல், பசுக்களைக் கைவிடுவோர் மீது வழக்குப் பதிவு செய்ய பாஜக அரசு முன்வந்திருப்பதாகவும் அவர் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.