Deputy Chief Minister of Tamilnadu Udhayanidhi Stalin:  தமிழ்நாட்டின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று  ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர்  அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு  ஏன் ஆளுநர் ஆர். என் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை  என்ற சந்தேகம் சிலருக்கு எழுந்துள்ளது. ஏன் பதவி பிரமாணம் செய்துகொள்ளவில்லை என பார்ப்போம்.


தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. 


உதயநிதி ஸ்டாலின்:


மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேரனும் , முதலமைச்சர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் 2021 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது , அமைச்சரவை அமைக்கப்பட்டபோது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படவில்லை, சட்டப்பேரவை உறுப்பினராகவே தொடர்ந்தார். 


இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட அவருக்கு, இளைஞர் மற்று விளையாட்டு துறை அமைச்சராக பதவி பிராமாணம் எடுத்துக் கொண்டு, அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 




துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட போகிறது என்ற தகவல் வெளியானது. மேலும் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்பட போகிறது எனவும் தகவல் வெளியானது. 


இந்த தருணத்தில்தான், நேற்று ஆளுநர் மாளிகையில் இருந்தே அறிவிப்பு வெளியானது. அதில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதற்கு ஒப்பதல் அளித்து உள்ளதாகவும் , அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதனை தொடர்ந்து இன்று , துணை முதலமைச்சர் பொறுப்பு பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உடன் சென்று கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் . 




ஏன் பதவி பிரமாணம் செய்யவில்லை?


இதையடுத்து, இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் ஏன் பதவி பிரமாணம் செய்து கொள்ளவில்லை என சிலருக்கு சந்தேகம் எழுவதை உணர முடிகிறது. 


துணை முதல்வர் பதவி தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது “ ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டாலும், வழக்கத்தில் அமைச்சர்தான். முதலமைசச்ர் தலைமையிலான அமைச்சரவையில் ஒருவர்தான். அமைச்சர்களில் கூடுதல் ஊதியமோ, சலுகைகளோ அதிகாரப்பூர்வமாக கிடையாது.  துணை முதல் அமைச்சர்கள், அமைச்சர்களாகத்தான் பதவியேற்றுள்ளார்கள்  “ என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.   


இந்நிலையில், துணை முதலமைச்சர் பதவி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவி இல்லை என்பதால், அது ஒரு அடையாளமாகவே கருதப்படுகிறது.  அதன் காரணமாகவே, தற்போது அவர் ஆளுநர் மாளிகையில் பதவி பிராமாணம் செய்து கொள்ள தேவையில்லை. 



”முறையாக செயல்படுவேன்”


துணை முதலமைச்சர் பதவி குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கையில்“ துணை முதலமைச்சர் என்பது பதவி கிடையாது, கூடுதல் பொறுப்பு. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்காக உழைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கிய முதலமைச்சர் மற்றும் பொதுச் செயலாளருக்கு நன்றி.  விமர்சனங்களை உள்வாங்கி அதிலே ஏதேனும் தவறு இருந்தால் சரி செய்து கொள்வேன். நான் அமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில் பல்வேறு விமர்சனங்கள் வந்தது. இந்த விமர்சனங்களை நான் பணிகளால் தான் எதிர் கொள்ள முடியும். விமர்சனம் என்றால் வர தான் செய்யும் அதனை நான் உள்வாங்கிக் கொண்டு முறையாக செயல்படுவேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 


Also Read: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!