தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்ற நிலையில், அவர்களுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்வோம். அதன்படி, தலித் சமூகத்தை சேர்ந்த கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஆவடி நாசருக்கு சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்:
இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஆவடி நாசரும் செந்தில் பாலாஜியும் ஏற்கனவே அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். அதேபோல, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் தலித்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதேபோல, வேங்கைவயலில் தண்ணீரில் மலம் கலந்தது போன்ற சாதிய கொடூரங்கள், ஆணவ படுகொலைகள் விவகாரம் பெரும் பிரச்னையை கிளப்பி வந்தது.
அமைச்சரவையில் அதிரடி:
அதேபோல, கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள், சமீப காலமாக, திமுகவுக்கு பெரும் நெருக்கடி தந்து வருகிறது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திருமா பேசிய வீடியோ வைரலானது, விசிகவின் மது ஒழிப்பு மாநாடு என கூட்டணியில் தொடர் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், தலித் சமூகத்தை சேர்ந்த கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. செழியனை சேர்த்து தமிழ்நாடு அமைச்சரவையில் இதுவரை மொத்தம் நான்கு தலித்கள் இடம்பெற்றுள்ளனர். மதிவேந்தன், கயல்விழி, சி.வி. கணேசன் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாக உள்ளனர்.
கைமாறிய துறைகள்:
- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம்
- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்
- ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றம்
- வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றம்
- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மாற்றம்
- நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
- அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கே. ராமச்சந்திரன் அரசு கொறாடவாக நியமனம்.
- உதயநிதிக்கு கூடுதலாக முதலமைச்சர் வகித்து வரும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.