செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி. செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக இன்று பதவியேற்று கொண்டனர். 


தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்த சூழலில், நேற்று வெளியான ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில், அமைச்சரவை மாற்றம் என்பது உறுதியானது. அதன்படி, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகியுள்ளார்.


தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்:


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சராக உள்ள அவருக்காக, முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வகித்து வந்த ஒரு துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோக, 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, 3 அமைச்சர்கள் புதியதாக அமைச்சரவையில் இணைக்கப்படுகின்றனர்.


பால்வள அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ், சிறுபான்மையின நல அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தான், வன அமைச்சராக இருந்த K ராமசந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்றாக ஆவடி நாசர், கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டனர்.


புதிய அமைச்சர்கள் பதவியேற்பு:


இந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி. செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவின் மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


கைமாறும் துறைகள்:



  • உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம்

  • சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்

  • ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றம்

  • வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றம்

  • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மாற்றம்

  • நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை

  • அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கே. ராமச்சந்திரன் அரசு கொறாடவாக நியமனம்.

  • உதயநிதிக்கு கூடுதலாக முதலமைச்சர் வகித்து வரும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.