அதிமுக உட்கட்சி பிரச்சனையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயத்தின் பக்கம் தான் வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போய் உள்ளது. சரியான மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.சூறை காற்றினால் கோவில்பட்டி பகுதியில் மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்தன.ஏற்கனவே தானும், கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்துள்ளோம்.சுரைக்கற்றால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர் .ஆனால் தற்போது வரை நடவடிக்கை இல்லை.கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதியில் காட்டுப்பன்றிகளால் பல ஆயிரக்கணக்கான பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகை பெற்று தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வரும் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிப்படைவது குறித்தும், நிவாரண நிதி அளிக்க வலியுறுத்தி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு ஆட்சிக்கு வந்த பின்னர் நிலைப்பாடு என்ற இரட்டை நிலைப்பாடு அவர்களின் அனைத்து கொள்கைகளுக்கும் பொருந்தும், எட்டு வழி சாலைக்கு திமுக ஒத்துழைப்பு கொடுத்திருந்தால். இந்தியாவிலேயே மிகப்பெரிய சாலையாக அமைந்திருக்கும்.எட்டு வழிச்சாலைக்கு எதிராக அன்றைக்கு இன்றைய முதல்வர் உட்பட திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டத்தை தூண்டி விட்டனர்.ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்த பின்னர் எட்டு வழி சாலை வேண்டுமென்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் என்றைக்கு தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர்.அதிமுகவை பிளவுபடுத்த சில தீய சக்திகள் முயற்சிக்கின்றனர். கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சி பிளவுபடுவதை சம்மதிக்காமல் 98 சதவீதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிற்கின்றனர். அதிமுக கட்சி பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷன் தீர்ப்பு வந்தாலும் சரி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தான்.இன்று இடைக்கால பொதுச் செயலாளர் இருப்பவர், நிரந்தர பொதுச் செயலாளராக மாறுவார். கழகத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வார். தீர்ப்பு நியாயத்தின் பக்கம் தான் வரும். மெஜாரிட்டி யார் பக்கம் இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.. அதையெல்லாம் மனதில் வைத்து தான் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். கூட்டணியில் இல்லை என்று அதிமுக, பாமக சொல்லவில்லை.பா.ம.க.மதிமுக கட்சிகளுக்கு தேர்தல் அங்கீகாரம் பெற்றுத்தந்தது அதிமுக தான்.கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்த அன்புமணி ராமதாஸ் பேசி இருக்கலாம்.சாதாரண சீமான் கூட நாங்க தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லுவார். மக்கள் நம்பிக்கை பெற கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்த சொல்லக்கூடிய வார்த்தை அது. தேர்தலின் போது அவர்கள் எங்களுக்கு உதவியாக இருந்திருப்பார்கள். எங்களால் அவர்களும் பயன்பெற்று இருப்பார்கள்.அதிமுகவினால் பயன்பெற்ற கட்சிகள் தான் தமிழகத்தில் உள்ளன.அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கெல்லாம் அங்கீகாரம் பெற்று தந்தது அதிமுக தான்.ஜெயலலிதா பற்றி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறிய கருத்துக்கள் கண்டனத்துக்குரியது. அவர் ராட்சச கூட்டத்தில் சேர்ந்த காரணத்தினால் தான் இது போன்ற கருத்துக்களை கூறியுள்ளார். அந்தக் கருத்துக்களை அவர் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும்போது கருப்புக் கொடி காட்டி முற்றுக்கையிடுவோம்” என்றார்.
இதற்கிடையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து , அதிமுக சார்பில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது.