சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி யார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கில் நேற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், “
சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது.
யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்தான்” என்று பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்தியளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது கண்டிக்கத்தக்கது என கருத்தும் தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிச் செல்வத்தைக் குவிப்பதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் ஒரே உறுதி. உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. நீங்கள், உங்கள் தந்தை ஆகியோர் உங்கள் இலட்சியவாதிகள் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து வாங்கிய ஐடியாவைக் கொண்டுள்ளனர் & அந்த மிஷனரிகளின் எண்ணம், அவர்களின் தீய சித்தாந்தத்தை வளர்க்க உங்களைப் போன்ற மந்தமானவர்களை வளர்க்க வேண்டும் என்பதுதான்.
தமிழகம் ஆன்மிக பூமி. இதுபோன்ற நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதுதான் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த செயல்!” என பதிவிட்டு இருந்தார்.
தொடர்ந்து புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை, “கிறிஸ்துவ மதம் மற்றும் இஸ்லாமிய மதம் வருவதற்கு முன்பே சனாதன தர்மம் என்ற வார்த்தை உருவாக்கிவிட்டது. ‘சனாதன தர்மம்’ என்பது நிலையான தத்துவஞானம். இது நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியிருப்பது நாட்டின் 142 கோடி மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். ஏனென்றால், நேற்று ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பை காட்டியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை அழிக்கபடுவதே இனப்படுகொலை எனப்படும். ‘சனாதன தர்மத்தை’ ஒழிக்க உதயநிதி யார்..? சனாதன, ஒழிக்கப்பட்டு விட்டால், கோயில்கள் மற்ரும் மதச்சடங்குகள் அனைத்தும் அழிந்துவிடும் “ என தெரிவித்தார்.