நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பல ஆண்டுகாலமாக, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி உதவியுடன், மீண்டும் காவல் நிலையத்தில்  இதுகுறித்து புகார் அளித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வழக்கு விசாரித்து இம்முறை தீர்வு காண வேண்டுமென நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமானும் கருத்து தெரிவித்துள்ளார். 

 



இந்த நிலையில் நடிகை வீரலட்சுமி திட்டமிட்டு அபாண்டமான குற்றச்சாட்டுகளை தெரிவித்தது வருவது  மட்டுமில்லாமல் பொய் புகார் அளித்து வருவதாகவும், அரசியல் களப்பணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் கூறி , நாம் தமிழர் கட்சியினர் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த 50-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் ஷாம் ராஜதுரை புகார் அளித்தனர்.



 

அந்த புகார் மனுவில்  தெரிவித்திருப்பதாவது : நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் எந்த ஆதாரமும் இல்லை. சீமானிடமிருந்து, 1 கோடி ரூபாய் பணம் பறிக்கும் உள்நோக்கத்திற்காக ஒரு பொய் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் சீமானின் தாயைப் பற்றியும் அவரது குடும்பத்தையும் அவதூறாக பேசி வருகின்றனர். இதே போல் தொடர்ச்சியாக பல்வேறு திரையுலக நடிகர்கள் மீது, குறிப்பாக கன்னட நடிகர் மீது வெவ்வேறு காலகட்டத்தில், பொய் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பணம் பறிப்பதற்காக மட்டுமே இந்த புகார் அளிப்பதை ஒரு வாடிக்கையாக வைத்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளது. 





 

அரசியல் காப்புணர்ச்சியுடனும் சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், மிரட்டி பணம் பறிக்கும் தீய நோக்கோடு  செயல் பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.


 

இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்த காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சால்டின் கூறியது : "  தேர்தல் வரும் பொழுது, யாரோ ஒருவர் விஜயலட்சுமியை இயக்குகிறார்கள். தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் வருவதற்கு முன்பாக விஜயலட்சுமி வந்துவிடுகிறார் . போலி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார்.