எல்லோரும் எதிர்பார்த்திருந்த அந்த ஒன்று வெகு விரைவில் நடக்க இருக்கிறது. திமுகவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு அமைச்சராக உள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஓராண்டில் அதிகமான செய்திகள் வெளியானது உதயநிதியின் அமைச்சர் பதவி பற்றித்தான். சேப்பாக்கம் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் உதயநிதியை அடுத்த துணை முதல்வர் என்ற வகையில்தான் இதுவரை பேசி வந்தனர். 


இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டானின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன. இதையடுத்து மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார். அப்போதே அவர் அமைச்சராவார் என்று ஊகப் பட்டியல் வெளியானது. இதற்கு ஒருசேர எதிர்பார்ப்பும் எதிர்ப்பும் எழுந்தது. 




இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல முக்கிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அதேபோல அமைச்சர் மூர்த்தி, சிவசங்கர் உள்ளிட்டோரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 


உதயநிதி அமைச்சராவது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும்போதெல்லாம் புன்னகையை மட்டுமே பரிசளித்துவிட்டுச் சென்றார் உதயநிதி. 


அதே நேரத்தில் அரசு விழாக்களிலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் முதல்வருக்குப் பின்னால் இரண்டு வரிசைகள் தள்ளி உதயநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.


அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில், தவறாமல் விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. அதேபோலக் கட்சி விழாக்கள், இளைஞரணித் திட்ட நிகழ்ச்சிகள் எனப் பொது வாழ்வுக்குள் முழுமையாக வந்துவிட்டார் உதயநிதி. சொந்தத் தொகுதியான திருவல்லிக்கேணி - சேப்பாக்கத்தில், சாலைகள் சீரமைப்பு, மதுக்கடைகள் அகற்றம் எனப் பல மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார்.


அமைச்சராகும் உதயநிதி?


வரும் மே 7ஆம் தேதி அன்று திமுக அரசு பதவியேற்று ஓராண்டு ஆக உள்ள நிலையில், அதே தினத்தில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. 




அதிகாரமிக்க, பொது மக்களுடன் அன்றாடம் தொடர்பில் உள்ள துறைகளை விடுத்து, எதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை என்று கேள்வி எழலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்புகொள்ளும் விதத்தில் இந்தத் துறை வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் பொறுப்பேற்ற பிறகு துறைப் பொறுப்பும் அதிகாரங்களும் முழுவீச்சில் மாற்றி அமைக்கப்பட உள்ளன.


ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரா?


இதற்கிடையே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பதவி உதயநிதிக்குக் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 2006- 11-ஆம் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், மாநிலம் முழுவதும் சென்று மக்களைச் சந்தித்தார். அந்த வகையில் மக்களைச் சந்திக்கும் வகையில் அமையும் அமைச்சர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.


அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டு, அதற்கெனத் தனியாக அவரின் கார் தயாராகி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.


முதலமைச்சரின் மகனாகவே இருந்தாலும் அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்த மு.க.ஸ்டாலினால், 68 வயதில்தான் முதலமைச்சராக முடிந்தது. அடுத்த தேர்தலின்போது 70 வயதைத் தாண்டியவராக ஸ்டாலின் இருப்பார். இந்தப் பிழை உதயநிதி விஷயத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதில் குடும்பத்தினர் கவனமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


திரைப் பயணம் 


இவை அனைத்துக்கும் நடுவில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி, மகிழ் திருமேனி இயக்கத்தில் பெயரிடப்படாத படம், மாரி செல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் ஆகிய படங்களில் நடிக்க உதய் ஒப்பந்தமாகி உள்ளார். அதற்குப் பிறகு மனைவி கிருத்திகாவின் இயக்கத்தில் உதயநிதியின் கடைசிப் படம் இருக்கும் என்றும் தகவல் வந்துள்ளது. இதற்குப் பிறகே உதயநிதிக்கு அமைச்சர் பதவிக்கான அச்சாரம் இடப்படும் என்றும் கூறப்படுகிறது. 




உதயநிதி அமைச்சரானால் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, திமுக மேலிடமே கசிய விட்டுள்ள செய்திதான் இந்த அமைச்சர் பதவி என்றும் அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. எது எப்படியோ, மே 7-ஆம் தேதி அமைச்சர் பதவிக்கான அனைத்து ஆருடங்களுக்கும் விடை கிடைத்துவிடும்.