மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி சமீபத்தில் இந்தியாவுக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவிடம் `கடந்த 7, 8 ஆண்டுகளில் பெரியளவிலான மத மோதல்கள் எதுவும் இந்தியாவில் நிகழவில்லை’ எனக் கூறியுள்ளார். 


ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த தூதுக் குழு ஒன்று தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான சிறப்பு பிரதிநிதி ஏமான் கில்மோர், இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஊகோ அஸ்டூடோ ஆகியோர் இன்று புதுடெல்லியில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியைச் சந்தித்து, நாட்டில் சிறுபான்மையினர் மீதான பாகுபாடு குறித்து எழுந்துள்ள புகார்களைப் பற்றி சந்தித்து பேசியுள்ளனர். 


ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவிடம் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடுகள் நிகழ்வதில்லை எனவும், கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணிகளில் சுமார் 4 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்த சிறுபான்மை பிரதிநிதித்துவம் தற்போது மோடி அரசில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 



அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, `ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழு தற்போது என்னைச் சந்தித்து பேசியதோடு, அனைத்து சமூகங்களும் பாகுபாடு இல்லாமல் சமூகப் பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் முன்னேற்றம் பெற்றிருப்பது குறித்து அவர்களிடம் தெரிவித்துள்ளேன். சிறுபான்மையினர் மீதான வன்முறை குறித்து முன்னாள் அரசு அதிகாரிகள் பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்களிடம் கடந்த 7, 8 ஆண்டுகளில், பெரிதாக மத மோதல்கள் எதுவும் நிகழவில்லை எனக் கூறியுள்ளேன். ஆங்காங்கே சில தனி நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கலாம். எனினும், மோடி அரசு குற்றவாளிகளின் மதம், சாதி ஆகியவற்றைக் கருதாமல் நடவடிக்கை எடுத்துள்ளது’ எனக் கூறியுள்ளார். 






மேலும் அவர் பல்வேறு நிகழ்வுகளின் குற்றப் பின்னணிக்கு மதச் சாயம் பூசப்பட்டு, பிரதமரின் பெயருக்குச் சில பிரிவினரால் சதித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் தூதுக் குழுவிடம் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 



மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தில் அதிகாரிகளின் தகவல்களின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழு அமைச்சரிடம் மதம் மாறுதல் தடுக்கப்படுவதாகவும், மதம் மாறும் உரிமை மீது தடை விதிக்கப்படுவதாகவும் கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, மதச் சுதந்திரத்தை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளதாகவும், தற்போதைய மோடி அரசு வலுக்கட்டாயமாகவும், மோசடி செய்தும் மதம் மாற்றுவதை மட்டுமே எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.