திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாதபோதும் சரி, அந்த கட்சியின் தொண்டர்களை ஒவ்வொருநாளும் சுறுசுறுப்பாகவும் உற்சாகவும் வைத்துக்கொள்ள முரசொலியில் தொடர்ந்து கடிதங்களை எழுதி அவர்களை சோர்வடையாமல் வைத்திருப்பார் கலைஞர் கருணாநிதி. அவர் வயது முதுமையால் செயல்பட முடியாமல் போன நிலையில், கலைஞர் கருணாநிதியின் அதே பாணியை கையிலெடுத்தார் மு.க.ஸ்டாலின்.



கலைஞர் கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின்


‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்று கருணாநிதியும், ’நம் உயிருடன் கலந்திருக்கும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்’ என்று மு.க.ஸ்டாலினினும் கடிதம் எழுதி வந்த நிலையில், இப்போது உதயநிதி ஸ்டாலினும் அதே பாணியை கைகொள்ளத் தொடங்கியிருக்கிறார்.



உதயநிதி ஸ்டாலின் - திமுக இளைஞரணி செயலாளர்


இன்றைய முரசொலியில் முழு பக்கத்திற்கு உதயநிதி ஸ்டாலின் ‘தொண்டரை போற்றுவோம்’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.  அனைவருக்கும் வணக்கம் என்று தொடங்கும் அந்த கடிதத்தில் ’கழகத்தின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க தஞ்சை – புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சென்று வந்தேன். தேர்தல் பிரச்சாரம் போல, எழுச்சியாக அமைந்த இந்த பயணம் குறித்து உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துகொள்ள ஏராளமான செய்திகள் உள்ளன’ என சொல்லி, அவரின் சுற்றுப்பயணம் குறித்த தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.



தொண்டர்களுக்கு உதயநிதி எழுதிய கடிதம்


வழக்கமாக ஒரு சுற்றுப்பயணத்திற்கு பிறகு கலைஞர் கருணாநிதியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதேபோன்றதொரு கடிதத்தை எழுதும் முறையை பின்பற்றி வந்த நிலையில், அதே மாதிரி, தற்போது உதயநிதி ஸ்டாலினும் தொண்டர்களுக்கு கடிதம் எழுத தொடங்கியிருப்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. உதயநிதி எழுதியுள்ள அந்த கடிதத்திலும் கூட அதிமுகவை விமர்சித்தே வரிகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.


ஒரு திருமண நிகழ்ச்சியில் தான் பங்கேற்று ‘பாஜகவுக்கு அடிமையாக இருக்கும் அதிமுகபோல் இல்லாமல், உரிமைகளை கேட்டுப் பெற்று, தேவையான நேரங்களில் விட்டுக் கொடுத்து, கலைஞரும் தமிழும் போல இணைந்து வாழ்க’ என மணமக்களை வாழ்த்தியதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இதிலும் கலைஞர் பாணியையே பின்பற்றி முயற்சித்திருக்கிறார் உதயநிதி.


அந்த கடிதத்தை பொறுத்தவரை தான் கட்சிக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டிருப்பதையும், நேரம், காலம் இல்லாமல் கட்சி நிகழ்ச்சிகளிலும் தொண்டர்களின் இல்ல விழாக்களிலும் கலந்துக்கொண்டு பணியாற்றி வருகிறேன் என்பதையும் உணர்த்தும் விதமாகவே அந்த கடிதம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.



உதயநிதி - அன்பில் மகேஷ்


உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று அவரது நண்பர் அன்பில் மகேஷ் தொடங்கி மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கேன்.என்.நேரு வரை பேசிய நிலையில், தனக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு தெரியும் என்று அறிக்கை விட்டவர் உதயநிதி. இப்போது இதுபோன்ற ஒரு கடிதத்தை முரசொலியில் எழுதத் தொடங்கியிருப்பதால், அமைச்சர் பதவி பெறுவதற்கு முன்னரும் கட்சியில் அடுத்த பதவியை அலங்கரிப்பதற்கு முன்பாகவும் தனக்கு திமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவு இருப்பதை வெளிப்படுத்தவே இதுபோன்ற முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்று கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


எம்.ஜி.ஆர், பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், தற்போது பொருளாளர் பொறுப்பு வகிக்கக் கூடிய டி.ஆர்.பாலு ஆகியோருக்கு பிறகு திமுகவின் பொருளாளர் என்ற பொறுப்பை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை அடுத்த பொதுக்குழுவில் அறிவிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. அதற்கான சமிக்கையாகவே முரசொலியில் கடிதம் எழுதத் தொடங்கியிருக்கிறார் உதயநிதி என்று கணிக்கிறார்கள் மூத்த முன்னோடிகள்