விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள நாட்டார்மங்கலத்தில் அதிமுக சார்பில் பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தலைமையில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.


மாநிலங்களவை உறுப்பினர் கண்டன உரையாற்றிய சிவி.சண்முகம் கூறியதாவது:


தற்போது உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி அமைச்சராக எப்படி செயல்பட போகிறார் என்பதை பார்ப்போம். இது என்ன ஜனநாயக நாடா, தாத்தா முதல்வர், அவரின் மகன் முதலமைச்சர், தற்போது பேரன் அமைச்சர் அடுத்த தை மாதத்தில் துணை முதலமைச்சர். ஸ்டாலின் குடும்பம் இன்று தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டும், கொள்ளையடித்துக் கொண்டும் இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தமிழக மக்களுக்கு என்ன செய்தார், திமுகவுக்கு என்ன செய்தார், போராட்டத்தில் ஈடுபட்டாரா, சிறைக்கு சென்றாரா என கேள்வி எழுப்பினார்.


ஐந்தாண்டுக்கு முன்புவரை உதயநிதி யார் என்றே தெரியாது. இது வெட்கக்கேடானது. இதுதான் திமுகவின் சுயமரியாதையா, திமுகவின் சுயமரியாதை உதயநிதி ஸ்டாலின் காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது. துரைமுருகன், பொன்முடியும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் எனக் கூறுகிறார்கள். எங்கே போனது இவர்களின் பெரியாரின் கொள்கை, சுயமரியாதை கொள்கை என விமர்சனம் செய்தார்.


ஜி ஸ்கொயர் நிறுவனம் தமிழகத்தில் நிலங்களை அபகரித்து வருவதாகவும், தமிழக அரசை போதை அரசு என விமர்சனம் செய்தார்.


மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதனால் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அதிமுகவினர் திண்டிவனம் - செஞ்சி பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.