கரூர் மாவட்டத்தில் திமுகவில் முதல் முறையாக அமைச்சராக இருப்பவர், மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். திருச்சி மாவட்டத்திலிருந்து, கரூர் தனி மாவட்டமாக 1995இல் பிரிக்கப்பட்டது. அப்போது, திருச்சி - கரூர் மாவட்ட செயலாளராக இருந்த பரமத்தி சண்முகம், கரூர் மாவட்ட செயலாளராக தொடர்ந்தார். பின், 1997 இல் நடந்த உள்கட்சி தேர்தலில் பரமத்தி சண்முகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீண்டும், 1999 இல் நடந்த உள்கட்சி தேர்தலில் கரூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த வாசுகி முருகேசன் தேர்வு செய்யப்பட்டார். அவர், தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு வரை மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார்.




அவருக்கு பிறகு, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளராக நன்னியூர் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். கடந்த 2014 இல் நடந்த, உள்கட்சி தேர்தலில் நன்னியூர் ராஜேந்திரன், தான்தோன்றி மலை ஒன்றிய செயலாளராக இருந்த ரவி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், 27 ஓட்டுகள் வித்யாசத்தில், நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, 2019-ல் மாவட்ட பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். அதுவரை, தி.மு.க.,வில் கவுண்டர் சமூகம், பிற சமூகம் என, இரு பிரிவாக பிளவுபட்டு கிடந்தது. இந்த பூசல் காரணமாக தொடர் தோல்வியை, தி.மு.க., சந்தித்து வந்தது. செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பின், 2019 லோக்சபா, 2019 அரவக்குறிச்சி இடைத்தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி என, 100 சதவீத வெற்றியை, தி.மு.க.,வுக்கு பெற்றுத் தந்தார்.




திருச்சி மாவட்டத்தில் கரூர் இருந்த போதும், கரூர் தனி மாவட்டமாக ஆன பிறகும், தி.மு.க., ஆட்சியில் இருந்த காலத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த யாரும் அமைச்சராக பதவியில் இல்லை. இந்நிலையில் கரூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, 27 ஆண்டுகளில், தி.மு.க.,வில் முதல் முறையாக செந்தில் பாலாஜிக்கு, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை வழங்கப்பட்டுள்ளது.




தற்போது நடந்த உள்கட்சி தேர்தலில், மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், மாவட்டம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து முதல் முறையாக அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் என இரு பதவிகளையும் செந்தில் பாலாஜி பெற்றுள்ளது, உள்ளூர் தி.மு.க.,வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.