அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், தேர்தலை நடத்த மாட்டோம் என ஈ.பி.எஸ் தரப்பு தெரிவித்துள்ளது.


அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.


ஓபிஎஸ் தரப்பு:


அப்போது, அதிமுக-வின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்தான் நியமிக்க முடியும் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், ஆனால் அது கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டது. 


அடுத்த விசாரணை வரும் வரை, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


உச்சநீதிமன்றம்:


இந்த விவகாரத்தில், எதிர்மனுதாரர்க்கு நோட்டீஸ் பிறப்பிக்கின்றோம், அதன் பிறகு விரிவாக விசாரணையை எடுத்துக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.  


மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு அவசரப்படுவது ஏன் எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.


இபிஎஸ் தரப்பு:


அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் எனவும் இபிஎஸ் தரப்பும் உத்தரவாதம் அளித்துள்ளது.


உத்தரவு


மேலும் தசரா விடுமுறைக்கு பின்னர், வழக்கை விசாரிக்கலாம் என கூறிய நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டது.


மேலும் ஏற்கனவே, இது சம்பந்தமாக நிலுவையில் உள்ள வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 






ஆவணங்களை சமர்ப்பித்த இபிஎஸ் தரப்பு:


அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் தேர்வு செய்துள்ளதாக  2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள், தங்களது ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்கியிருந்தனர். இந்நிலையில் வழங்கப்பட்ட கடிதங்களை, தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் தரப்பு சமர்பித்தது.


டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம், உறுப்பினர்களின் கடிதங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பின் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் சமர்ப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.