தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாக நாளுக்கு நாள் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலை மிகவும் போட்டியானதாக மாற்றியதில் விஜய்க்கு முக்கிய பங்கு உள்ளது. 

Continues below advertisement

நாளை ஈரோட்டில் விஜய்:

அவர் அரசியல் கட்சி தொடங்கியது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகிய நிலையில், தனது பரப்புரையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரப்படுத்தினார். இந்த நிலையில், கரூர் சம்பவத்தில் விஜய்யைப் பார்க்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு முடங்கிய விஜய்யும், தவெக-வும் தற்போது மீண்டும் உத்வேகத்துடன் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். 

செங்கோட்டையன் அக்கட்சியில் இணைந்த பிறகு நாளை தவெக-வின் பரப்புரை ஈரோட்டில் நடக்கிறது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடக்கும் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சராஜ செங்கோட்டையனின் மேற்பார்வையில் இந்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

Continues below advertisement

செங்கோட்டையன் தீவிரம்:

தனது மக்கள் சந்திப்பை தொடங்கி தீவிரமாக நடத்தி வந்த விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு மிகவும் கவனமாகவே செயல்பட்டு வருகிறார். காஞ்சிபுரத்தில் கல்லூரி வளாகத்திலும், பாண்டிச்சேரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் பேசிய விஜய், தமிழ்நாட்டில் நாளை மீண்டும் முதன்முறையாக கரூர் சம்பவத்திற்கு பிறகு பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பு பேச உள்ளார். 

அதிமுக-வின் முக்கிய தலைவராக உலா வந்த செங்கோட்டையன் அங்கிருந்து வெளியேறிய பிறகு, தவெக-விற்காக நடத்தும் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும். இதனால், தனது பலத்தையும், செல்வாக்கையும் காட்டவும் செங்கோட்டையன் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

35 ஆயிரம் மக்கள்:

சுமார் 35 ஆயிரம் மக்கள் வந்தாலும் சமாளிக்கும் வகையில் இந்த பணிகளை மேற்கொண்டிருப்பதாக செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். விஜய்யை காண்பதற்காக ஈரோடு மட்டுமின்றி கோவை, நாமக்கல் , சேலம் என கொங்கு மண்டலத்தில் இருந்து ஏராளமானோர் குவிவார்கள் என்று கருதப்படுகிறது. 

பாதுகாப்பு பணியிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளைய பொதுக்கூட்ட மேடையானது மீண்டும் விஜய்யின் அரசியலை வேகப்படுத்தும் ஒன்றாக கருதப்படுகிறது. இதனால், அவரது பேச்சில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கருத்துக்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலத்திற்கும் குறைவாக இருப்பதால் விஜய்யின் இந்த பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவரது கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

அரசியல் பிரபலங்கள் இணைவார்களா?

இதுமட்டுமின்றி செங்கோட்டையன் முன்னாள் அமைச்சர் ஒருவர் தவெக மேடையில் நாளை விஜய் முன்பு இணைய உள்ளார் என்று கூறி வருகிறார். இதனால், நாளை முக்கிய அரசியல் பிரபலங்கள் விஜய் முன்பு தவெக-வில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

பாதுகாப்பு அம்சங்கள்:

மக்களின் பாதுகாப்பு கருதி 14 ஆம்புலன்ஸ், 58 மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.  குடிதண்ணீர் வசதிக்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 10 தண்ணீர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. 

கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது பொதுக்கூட்டம், அரசியல் பரப்புரைகளில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதனால், காவல்துறையினரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.