100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  100 நாட்கள் வேலை திட்டத்திற்கு பதிலாக விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மசோதா 

அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்  திட்டத்திற்குப் பதிலாக, விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ளது. இந்தச் சட்டமுன்வடிவில் ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்பது மத்திய அரசு வகுக்கும் வரம்புகளுக்கு உட்பட்டு மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன்படி மக்கள் தொகை, வறுமை ஆகியவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக குறைவதோடு, வேலை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறையக்கூடும்.

விவசாயிகளை பாதிக்கும் செயல்

இந்த திட்டத்திற்கான மத்திய நிதி உதவி என்பது 60 விழுக்காடாகவும், மாநில நிதி உதவி என்பது 40 விழுக்காடாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசின் நிதி உதவி என்பது 100 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மாநிலங்களின் மீது 40 விழுக்காடு கூடுதல் நிதி திணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நிதியாண்டிலும் விதைப்பு மற்றும் அறுவடை உள்ளிட்ட வேளாண் பருவம் குறித்த 60 நாட்களை மாநில அரசு அறிவிக்க வேண்டுமென்றும், அந்த நாட்களில் இந்தச் சட்டத்தின்கீழ் எந்தப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வேளாண் பருவத்தில் குறைந்த ஊதியத்தில் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

சட்டமுன்வடிவு -வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது

தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமுன்வடிவு வேலை பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும், வேளாண் பருவக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்கவும் வழிவகை செய்வதோடு, மாநில அரசுகளின் மீது கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்தும். ஏற்கெனவே, நிதிப் பகிர்வின் மூலம் குறைந்த ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இந்தச் சட்டமுன்வடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே மாநிலங்களின் நலன்களையும், விவசாயப் பெருங்குடி மக்கள் உள்ளிட்ட ஏழையெளிய கிராமப்புற மக்களின் நலன்களையும் பாதிக்கும் விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளவர், நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்று அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.