தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை முன்னெடுத்து முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர். திமுக தனது அரசியல் வேலையை விரிவுபடுத்தியுள்ள நிலையில், அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விஜய்:
வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பவர் நடிகர் விஜய்யே ஆவார். ஏனென்றால், பலம் வாய்ந்த பழம்பெருமை வாய்ந்த திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து அவர் களமிறங்கியுள்ளார். தனது முதல் அரசியல் மேடையிலே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற அறிவிப்போடு அழைப்பு விடுத்தார். ஆனால், விஜய்யின் அறிவிப்பை ஏற்று இதுவரை எந்த கட்சியும் அவர் பக்கம் வரவில்லை.
விஜய்யைப் பொறுத்தவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மட்டுமே அவர் வெளிப்படையாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வர மறுத்து வருகிறார். அதேசமயம், விஜய் முன்பு அந்த வாய்ப்பை தற்போது பாமக பிரகாசப்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணிக்கு அடம்பிடிக்கும் ராமதாஸ்:
ஏனென்றால், பாமக-வில் தந்தை ராமதாசிற்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நடக்கும் மோதல் குடும்பத் தகராறு மட்டுமின்றி யாருடன் கூட்டணி வைப்பது என்பதும் ஆகும். கடந்த சட்டமன்ற தேர்தல் முதல் பாஜக கூட்டணியில் இடம்பிடித்து வரும் பாமக மீது சரமாரியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. பாமக கட்சியின் தொண்டர்கள் பலருக்குமே பாஜக கூட்டணியில் முழு உடன்பாடு இல்லை என்றே கூறப்படுகிறது.
இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி சேர ராமதாஸ் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியில் இடம்பிடிக்கவே அன்புமணி ஆர்வம் காட்டி வருகிறார். ராமதாசை சமாதானப்படுத்த பாஜக-வும், அதிமுக-வும் முயற்சி செய்தும், அவர் திமுக கூட்டணியில் இடம்பிடிக்கவே முழு வீச்சில் உள்ளார். ராமதாசையும், அன்புமணியையும் சமரசப்படுத்த ஜிகே மணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விஜய் பக்கம் போவாரா திருமா?
ராமதாசும், அன்புமணியும் முழுமனதுடன் திமுக கூட்டணிக்கு தாவினால், அடுத்த நொடியே திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறிவிடும். பாமக இடம்பிடிக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்க மாட்டோம் என்று திருமாவளவன் உறுதியாக உள்ளார். இதனால், திமுக கூட்டணியில் பாமக இடம்பிடித்தால் திருமாவளவன் வெளியேறுவது நிச்சயம். அவ்வாறு திருமாவளவன் வெளியேறினால் பாஜக கூட்டணியில் இடம்பிடிக்கும் அதிமுக பக்கம் அவர் செல்வதற்கு வாய்ப்புகள் கிடையாது. இந்த அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் நடந்தால் திருமாவளவனை தவெக இழுக்க விஜய் முழு நடவடிக்கையை எடுப்பார்.
மேலும், மேலே கூறிய அரசியல் நகர்வுகள் அரங்கேறினால் திருமாவளவனுக்கும் முதல் தேர்வாக விஜய்யே இருப்பார் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், நடிகர் விஜய் தற்போது பாமக எடுக்கப்போகும் முடிவுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.