தமிழக அரசியல் களம் தற்போது முதலே 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகரும். தவெக தலைவர் விஜய்யும் ஆவார். தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வரும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினர்.


அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்:


விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக-வின் முதல் அரசியல் மாநாட்டில் விஜய் தனது கொள்கைகள், செயல்திட்டங்களை அறிவித்தார். இது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், தங்களுடைய கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும், அரசியல் எதிரி தி.மு.க. என்றும் அறிவித்தார். விஜய்யின் பேச்சும், கொள்கைகளும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பு மற்ற கட்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. திருமாவளவனின் நீண்ட கால கோரிக்கையை விஜய் வெளிப்படையாக அறிவித்தது தி.மு.க.விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், தவெக-வின் கொள்கை தலைவர்களில் ஒருவரும், விசிகவின் தலைவர்களில் ஒருவரான அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


அரசியல் மாநாட்டிற்கு பிறகு முதல் நிகழ்ச்சி:


இதையடுத்து, இன்று சென்னையில் இன்று எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதலில் நடிகர் விஜய்யுடன் இணைந்து திருமாவளவனும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சியை விமர்சித்த விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சித் தலைவரான திருமாவளவன் பங்கேற்பதை தி.மு.க. விரும்பவில்லை. பின்னர் ஏற்பட்ட பல சலசலப்புக்கு பிறகு திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த பரபரப்பான அரசியல் சூழலில், விஜய் இன்று மாலை நடக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். விக்கிரவாண்டி அரசியல் மாநாட்டில் பங்கேற்ற பிறகு நடிகர் விஜய் பங்கேற்கும் முதல் அரசியல் பொது நிகழ்வு இதுவாகும். புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை விஜய் ஆற்ற உள்ளதால், அவர் என்ன பேசுவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ளது.


என்ன பேசப்போகிறார்?


ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, அதானி லஞ்ச விவகார சர்ச்சை, மகாராஷ்ட்ரா தேர்தல் முடிவுகள், விவசாயிகள் போராட்டம் என மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ள சூழலில் விஜய் இன்று என்ன பேசப்போகிறார்? அவரது பேச்சில் ஆளுங்கட்சி மீதான விமர்சனம் இருக்குமா? விழாவை புறக்கணித்த திருமாவளவன் பற்றி பேசுவாரா? ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் பகுதி மக்களை நேரில் சென்று சந்திக்காதது பற்றி விளக்கம் அளிப்பாரா? என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. விஜய்யின் இன்றைய பேச்சை எதிர்க்கட்சியினரும் உன்னிப்பாக கவனிக்கத் தயாராகியுள்ளனர்.