மகாராரஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி என அழைக்கப்படும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், அக்கூட்டணியில் யார் முதலமைச்சர் என்ற இழுபறியானது 12 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த நிலையில் , இன்று தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
மகாயுதி கூட்டணியில் பாஜக, ஷிண்டே தரப்பு சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு விழா:
மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் நவ. 23 ஆம் தேதி வெளியான நிலையில், முதல்வர் பதவியேற்பு விழாவானது, இன்று மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, கடைசி நிமிடம்வரை , என்ன முடிவை சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஷிண்டே எடுக்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
ட்விஸ்ட் வைத்த ஷிண்டே:
முதலமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, மீண்டும் முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அதிக இடங்களை பாஜக கைப்பற்றியதால், பாஜகவின் கை ஓங்கியது. அதனால், முதலமைச்சர் பதவியை விட்டுத்தர பாஜக மறுத்துவிட்டது.
ஆனாலும், விடாப்பிடியாக சிவசேனா தரப்பு இருந்தாலும் , சாதகமான சூழ்நிலை அமையவில்லை , அதற்கு காரணம் பாஜகவின் வெற்றிதான்.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 132 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது; ஷிண்டே தரப்பு சிவசேனா 57 தொகுதிகளில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்று , பாஜக கூட்டணியை வெற்றிக் கொடியை ஏற்ற வைத்தனர்.
அதிகாரம் வேண்டும்:
இந்நிலையில், ஒருவழியாக துணை முதல்வர் பதவியை ஷிண்டே ஏற்றுக் கொண்டாலும், வலுவான அதிகாரத்தில் இருக்க வேண்டும் என சிவசேனா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
முதல்வர் பதவி இல்லை என்றால் உள்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய அமைச்சகங்களை வேண்டும் என்று ஷிண்டே கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சராக இல்லையென்றாலும், அதிகாரம் , நம் பக்கம் இருக்க வேண்டும் என , சமயோசிதமாக ஷிண்டே முடிவு எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், எப்போது அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள், அமைச்சரவை ஒதுக்கீடு போன்ற தகவல்கள், இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.