தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் விஜய். இவருக்கு தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் ஆர்வததுடன் காணப்பட்ட விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினர்.
சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் விஜய்:
அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு நடிகர் விஜய் பெரிதளவு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினர்.
விஜய்யின் கொள்கைகளும், அரசியல் பேச்சும். கூட்டணி அழைப்பும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, விஜய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். அதேசமயம், சட்டமன்ற தேர்தலுக்கான தனது அரசியல் பயணத்தையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
குறிவைக்கும் தொகுதி எது?
சட்டசபைத் தேர்தலை மையமாக கொண்டு செயல்படும் விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் களமிறங்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் விஜய் திராவிட கட்சிகள் பெரியளவு ஆதிக்கம் செலுத்தாத தொகுதியில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சிகள் ஆகும். தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த இரண்டு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் உள்ளனர். குறிப்பாக, ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தலைவர்கள் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ளனர். சில மாவட்டங்களில் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர்.
இதனால், தி.மு.க. அமைச்சர்கள். தலைவர்களின் ஆதிக்கம் அதிகளவு இல்லாத மாவட்டங்களை விஜய் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் விஜய் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தொகுதியிலே வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மீனவர்கள் வாக்கு:
விஜய்யின் தந்தை மீனவர் என்பதால் நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள வாக்காளர்களில் பெரும்பாலோனர் மீனவர்கள் என்பதாலும் விஜய் அந்த வாக்குகளை குறிவைக்கிறார்? என்றும் கூறப்படுகிறது. தொகுதி நிலவரம் குறித்து ஆய்வு செய்யவும் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாகப்பட்டினம் தொகுதியில் அவர் போட்டியிடாவிட்டால் அவர் அரியலூர் அல்லது தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, சாயல்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் சக்தியாக மீனவர்கள் உள்ளனர். இதனால், விஜய் கடலோர தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வி சென்டிமென்ட்:
இந்த தொகுதிகள் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், வி சென்டிமென்டில் விக்கிரவாண்டி வி சாலையில் மாநாட்டை நடத்திய விஜய், வி- எனும் வார்த்தையில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.வைத் தொடங்கியபோது விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுபோல, விஜய்யும் வி சென்டிமென்டை பின்பற்றுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.