மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் குறித்து காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான கன்னையா குமார் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


வரும் நவம்பர் 20ஆம் தேதி, மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


துணை முதல்வரின் மனைவி குறித்து சர்ச்சை கருத்து:


ஆட்சியை தக்க வைக்க பாஜக தலைமையிலான கூட்டணியும் மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர வைக்க இந்தியா கூட்டணியும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் குறித்து காங்கிரஸ் இளம் தலைவர் கன்னையா குமார் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கன்னையா குமார், "துணை முதலமைச்சர் மனைவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு கொண்ருக்கும் வேளையில் மதத்தைக் காப்பாற்றும் பொறுப்பு நமதாக இருக்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து மதத்தை காப்பாற்ற வேண்டும்.


இது ஒரு 'தரம்யுத்தம்' என்று துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். நல்ல விஷயம். ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதே நமது தர்மம். அதற்காகதான் இன்று உரை நிகழ்த்துகிறேன்.


கன்னையா குமார் பேசியது என்ன?


எந்தத் தலைவர் மதத்தைக் காப்பாற்றப் பேசுகிறாரோ, அந்தத் தலைவர்களிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கேட்க வேண்டும்: மதத்தைக் காப்பாற்றும் இந்தப் போராட்டத்தில் உங்கள் மகனோ, மகளோ எங்களுடன் இணைந்து கொள்வார்களா?" என்றார்.


துணை முதல்வரின் மனைவி குறித்து கன்னையா குமார் தெரிவித்த கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அம்ருதா ஃபட்னாவிஸின் அவமதிப்பு ஒவ்வொரு மராத்தி பெண்ணையும் அவமதிக்கும் செயலாகும்" என குறிப்பிட்டுள்ளார்.


கடந்த வாரம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், "தற்போது மாநிலத்தில் வாக்கு ஜிகாத் தொடங்கியுள்ளது. அதை மக்களவை தேர்தலில் பார்த்தோம். துலேயில், நாங்கள் 1.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தோம்.


ஆனால், மாலேகான் (சட்டமன்றப் பகுதி) தொகுதியில் 1.94 லட்சம் வாக்குகள் இருக்கின்றன. அங்கு வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, நாங்கள் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டோம். நாங்கள் ஒன்றாக இல்லாததால் இந்த வாக்கு ஜிகாத் தான் அங்கு எங்கள் தோல்விக்கு காரணம்" என்றார்.