TVK VCK: முழு நேரமும் திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதை நிறுத்திவிட்டு சொந்தக் கட்சியான விசிகவை வளர்க்கவும் பாடுபடுங்கள் என தவெகவினர் ஆளூர் ஷா நவாஸை சாடியுள்ளனர்.
நாகையில் விஜய் பேச்சு..
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அன்று நாகையில் பேசுகையில், அந்த மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை பட்டியலிட்டார். அதில். நாகப்பட்டினத்தில் அதிகமாக இருக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாக்கவும், கடல்சார் கல்லூரியை கொண்டுவவும் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது என குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு திமுகவை தாண்டி அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள், விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் நாகை சட்டமன்ற உறுப்பினரான விசிகவின் ஆளுர் ஷா நவாஸ் விஜயை கடுமையாக சாடியுள்ளார்.
ஷா நவாஸ் பதிலடி
விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த ஷா நவாஸ், “விஜய் பேசுவது எல்லாம் பொய்ப்புரட்டுதான். அவதூறான, இட்டுக்கட்டிய பொய்களை வாய்க்கு வந்ததை விஜய் பேசத் தொடங்கியுள்ளார். அவர் இருக்கிற கட்சிகள் மீது வன்மத்தை கக்குகிறார். அது யாருடைய அரசியல்? அதனால்தான் அண்ணாமலை, ஆளுநர் ரவியுடன் ஒப்பிட்டு அவரைப் பற்றி பேசுகிறேன். விஜய்க்கு எல்லாதரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் தற்போது நடிகராக இல்லை. அரசியல்வாதியாகிவிட்டார். திமுக, அரசு மீது அடுக்கடுக்கான அவதூறுகளை பரப்புகிறார்” என ஆவேசமாக பேசியுள்ளார். அவருடைய இந்த கருத்துக்கு தான் தவெகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
விசிகவை ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக
விஜயின் எந்த குற்றச்சாட்டை நீங்கள் பொய் என குறிப்பிடுகிறீர் என்பதை விளக்க வேண்டும் என, தவெகவினர் ஷா நவாஸை நோக்கி கேள்வி கனைகளை தொடுத்து வருகின்றனர். கடல் சார்ந்த தொழில்கள் மிகுந்த நாகை மாவட்டத்தில், கடல்சார் தொடர்பான கல்லூரியை தொடங்கி இருக்கலாம் என விஜய் குறிப்பிட்டார். ஆனால், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம், ”தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது” என குறிப்பிட்டு விஜய் பொய் பேசி வருவதாக விளக்கமளித்துள்ளது. உண்மையில் மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கடல்சார் பல்கலைக் கழகம் என்பதும் வேறு வேறு என்பது உங்களுக்கு தெரியாதா ஷா நவாஸ்? அல்லது தெரிந்திருந்தும் கூட்டணி தர்மம் என்ற பெயரில் அரசின் பொய்யான விளக்கங்களுக்கு எல்லாம் விசிக ஆதரவு கொடுக்கிறதா? என தவெகவினர் களமாடி வருகின்றனர்.
”முட்டுக் கொடுப்பதை நிறுத்துங்கள்”
விசிக என்ற கட்சி ஒருகாலத்தில் தனித்து செயல்பட்டு மக்களுக்காக போராடி வந்தது, ஆனால் திமுக ஆட்சி அமைந்த பிறகு முழு நேரமும் அவர்களுக்கு முட்டுக் கொடுப்பதையே கொள்கையாக ஏற்றுள்ளதா? திமுக அரசை காப்பாற்றுவதில் செலுத்தும் கவனத்தை, சற்றேனும் சொந்த கட்சியை வளர்ப்பதில் செலுத்துங்கள் என ஷா நவாஸையும் குறிவைத்து தவெக விர்ட்சுவல் வாரியர்ஸ் களமாடி வருகின்றனர். ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் கட்சிக் கொடியை கூட ஏற்றமுடியவில்லை என உங்கள் கட்சி தலைவரே புலம்பி வருகிறார். அப்படி இருக்கையில் உங்கள் தொகுதியின் நலனுக்காக குரல் கொடுப்பதை கூட பொய் பித்தலாட்டம் என சாடுவதற்கு மனசாட்சி இல்லையா? திமுகவின் ஒரு அணியை போன்று செயல்படுவதை நிறுத்திவிட்டு, மக்களுக்கான பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்க முயலுங்கள் ஷா நவாஸ் என தவெகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மீன்வள Vs கடல்சார் பல்கலைக்கழகம்:
உண்மையில் மீன்வளக் கல்லூரிகளும், கடல்சார் கல்லூரிகளும் வித்தியாசமானவை. மீன்வளக் கல்லூரி என்பது மீன்வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல் மற்றும் மீன் தொடர்புடைய அறிவியல்களில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் கடல்சார் கல்லூரி என்பது கடல்சார்வியல் மற்றும் கடல் தொழில்நுட்பத்தில் பரந்த திட்டங்களை வழங்குகிறது. இரண்டுமே கடல் சார்ந்த கல்வியினையே வழங்கினாலும், இரண்டிற்குமே பெரிய வித்தியாசம் உண்டு. மீன்வளம் என்பது நீர்வாழ் வளங்களைப் பற்றியது, அதேசமயம் கடல்சார் கல்லூரிகள் கடலுடன் தொடர்பு கொள்ளும் கப்பல்கள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றியது என்ற விவரங்களையும் தவெகவினர் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.