நம்மை அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும் ஏழு கட்ட தேர்தல் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 


நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:


வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 25 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகிறது.


தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு எதிராக பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, 4 கட்ட வேட்பாளர் பட்டியை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.


ஆனால், காங்கிரஸ் நிறுத்தும் சில வேட்பாளர்கள் மீது புகார் எழுந்த வண்ணம் உள்ளது. வெறுப்புணர்வை பரப்பும் சிலருக்கு காங்கிரஸ் வாய்ப்பளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை கடுமையாக சாடியுள்ள எழுத்தாளரும் காந்தியின் பேரனுமான துஷார் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது துஷார் காந்தி விமர்சனம்:


அதில், "தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தேர்வு செய்துள்ள சில வேட்பாளர்கள் மோசமானவர்கள். காங்கிரஸால் நல்ல வேட்பாளர்களைக் தேர்வு செய்ய முடியவில்லை என்பது சோகத்தை தருகிறது. எனக்கு வேறு வழி இல்லை.


 






பாஜக, சங் பரிவார் தீய சக்தியை தோற்கடிக்க, நான் INDIA கூட்டணியை ஆதரிக்க வேண்டும். வருத்தமாக உள்ளது" என துஷார் காந்தி பதிவிட்டுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் பல முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல் நாத்தின் மகன் நகுன் நாத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: INDIA Rally: நெருங்கும் தேர்தல்.. கெஜ்ரிவாலுக்காக I.N.D.I.A கூட்டணி எடுத்த அதிரடி முடிவு.. அலறும் பாஜக!