Kamalhassan: சென்னை தியாகராய நகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.


சாதியம் தான் எனது எதிரி - கமல்ஹாசன்:


இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களவை தேர்தல் பரப்புரையில் நேரடியாக ஈடுபட உள்ளேன். எனது எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே எனக்கு சாதியம் தான் எதிரி. 70 ஆண்டுகளுக்கு முந்தைய சாதியத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. விலங்கிடப்பட்டவர்கள் யார் என்பதை அறிய சாதிய வாரி கணக்கெடுப்பு அவசியம். திமுகவை விமர்சித்து ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டு, அவர்களுடனே கூட்டணியா என்று கேட்கிறார்கள். நமது டிவி, நமது ரிமோட். அது எப்போதும் அங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டிவிக்கான கரண்ட், ரிமோட்டிற்கான பேட்டரிகளை எடுப்பவர்கள் தான் முக்கியம். அந்த  கரண்டையும், பேட்டரியையும் உருவக்கூடிய சக்தி ஒன்றியத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதை இனிமேல் நான் எறிந்தால் என்ன வைத்திருந்தால் என்ன? அந்த மாதிரி செயல்களுக்கு இனிமேல் அர்த்தமே இல்லாமல் போய்விடும். மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன்.


தேர்தலில் ஏன் போட்டியில்லை:


மக்களவை தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல. வியூகம். ஒன்று, இரண்டு தொகுதிகள் என இல்லாமல், அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை செய்ய முடியும்.  இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்டது போல் என்னையும் கேட்பார்கள் அவர் சொன்ன பதிலை தான் நானும் செல்லுவேன். நான் காந்தியின் கொள்ளு பேரன். நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை. நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது. பிரதமர் என்பதற்காக மோடி இங்கு வந்தால் அவருக்கு தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன்” என கமல்ஹாசன் பேசியுள்ளார்.



தேர்தல் பரப்புரை:


மக்களவைத் தேர்தல் பரப்புரையில் வரும் 27-ம் தேதி முதல் திமுக கூட்டணியை ஆதரித்து 30 தொகுதிகளில் நேரடியாக கமல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பான கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சாலம், துணைத் தலைவர்கள் மவுரியா மற்றும் தங்கவேலு ஆகியோருடன் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாநிலச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் துணைச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், பரப்புரையாளர்கள் குழு மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில நிர்வாகிகள் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.