அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனின் நம்பிக்கைக்கு உரிய தெய்வமாக இருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் தான். டிடிவி தினகரன் வீட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், அரசியலில் முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் முதலில் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்த பின்புதான் அந்த வேலையை தொடங்குவார். அதன் அடிப்படையில் டிடிவி ஆவலோடு எதிர்பார்த்து இருந்தது மகள் ஜெயஹரினி-ராம்நாத் திருமணம் தான். இந்த திருமணத்தை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்தான் நடத்தவேண்டும் என்று திட்டமிட்ட டிடிவி, அதற்கான வேலைகளை நேரடியாக அவரே எடுத்து செய்து வந்தார். கடந்த மாதம் ஆரம்பத்தில் திருவண்ணாமலை வந்த டிடிவி.தினகரன் தனது மனைவியுடன்  அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்துட்டு, மகள் ஜெயஹரினி திருமணம் "அண்ணாமலையார் ஆசீர்வாதத்துடன் இதே கோயிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்தில் ஜூன் 13-ம் தேதி  நடத்தவுள்ளேன் அதற்கு அனுமதி வேண்டும்" என கூறி கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று திருமண பதிவு செய்து, பின்பு கல்யாண சுந்தரேஸ்வரர் மடத்தை பார்வையிட்டு சென்றார். 


 




 


ஜெயஹரினி-ராம்நாத் திருமணம் சசிகலா தலைமையில் நடக்க இருந்ததால் அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடத்து வந்தது.அந்த ஏற்பாடுகளை திருவண்ணாமலையை சேர்ந்த டிடிவிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் செய்து வந்தனர். திருமணத்துக்கு உறவினர்கள் மட்டுமின்றி, வி.ஐ.பி.,க்கள் ஏராளமானோரை தினகரன் அழைத்திருந்தாக தெரிகிறது. அ.தி.மு.க-வை சேர்ந்த மிக முக்கிய நிர்வாகிகளும் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள இருந்ததாகவும் செய்திகள் கசிந்தன. அதன் மூலம் அரசியல் மாற்றங்கள் கூட நிகழ இருந்ததாக தகவல்கள் அடிபட்டது.


இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்த நிலையில்  தமிழக அரசு ஊரடங்கு அமலுக்கு வந்தநிலையில் திருமணத்திற்கு 10 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு கூறிய நிலையில், சசிகலா உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் பங்கேற்க முடியாது என்பதால், 13-ம் தேதி நடக்கவிருந்த திருமணத்தை டிடிவி.தினகரன் தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கிறார்.  



 


வருகிற செப்டம்பர் அல்லது அதற்கு அடுத்த மாதங்களில் ஏதாவது ஒரு தேதியில் நடத்தி கொள்ள இருப்பதாக, கோயில் நிர்வாகத்திடம் அவருடைய நெருங்கியவர்கள் மூலம் கடிதம் கொடுத்து இருப்பதாக தெரிகிறது.


இந்த திருமணம் மூலம் சசிகலாவிடம் மறைமுகமாக பேசிவரும் அ.தி.மு.க  நிர்வாகிகள் யார் என்று தெரிந்து கொள்ளும் வகையில் இந்த திருமணம் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மூலம், பல ஸ்லீப்பர் செல்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள் என கூறப்பட்டது. அதிமுகவில் அது ஒரு விதமான பதட்டத்தையும் அளித்தது.  ஆனால்,  கொரோனா தொற்றால் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டதால் அ.தி.மு.க வில் தற்காலிகமாக பதற்றம் தணிந்து இருக்கிறது.