தலைவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சோஷியல் மீடியா பிரபலம் கிஷோர் கே.சுவாமி 28 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியது, அண்ணல் அம்பேத்கரை ஆங்கிலேய அடிப்பொடி என்றது என கிஷோரின் ட்விட்டர் பக்கங்கள் அவதூறுகளால் அழுக்கேறியவை.கைது செய்து நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கிஷோரை வக்கிர புத்திகொண்டவர், பெண்கள் பற்றிய கிஷோரின் குரூரமான கருத்துகள் கேவலமான எண்ணம் கொண்டவை என விமர்சித்துள்ளது தாம்பரம் கிளை நீதிமன்றம். யூட்யூப் ட்விட்டர் எனச் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளில் ஈடுபடுபவர்களை அண்மைக் காலமாகவே கைது செய்து வருகிறது ஆளும் அரசு. அந்த வகையில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘காரணமே இல்லையென்றாலும் என்னைக் கைது செய்யுங்கள்’ என ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினுக்குச் சவால்விட்ட கிஷோர் ஸ்வாமி தற்போது கைதாகியிருக்கிறார்.
கிஷோரின் இந்தக் கைதை அடுத்து, தி.மு.க.வின் லியோனிக்கள் இருக்க கிஷோர் மட்டும் கைதா எனப் பொங்கி எழுந்துள்ளது தமிழ்நாடு பாரதிய ஜனதா. கருத்து சொன்னதுக்கு கைதென்றால் அறிவாலயத்தின் சரிபாதிபேர் சிறையில்தான் இருக்கவேண்டும் என விமர்சித்துள்ளார் அந்தக் கட்சியின் விநோஜ் பி.செல்வம். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான போர் என்றுள்ளார்.
கிஷோர் கே.சுவாமியை திமுக கைது செய்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உதயநிதி பிரதமரை விமர்சித்தபோதும் திருமாவளவன் பார்ப்பனர்களை விமர்சித்தபோதும் எங்கே போனது இந்த ஜனநாயகம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அந்தக் கட்சியின் காயத்ரி ரகுராம்.
திராவிட முன்னேற்றக்கழகம் ஒடுக்குமுறையில் ஈடுபடுவதாகக் கூறியிருக்கிறார் கிஷோரின் சக பதிவரான மாரிதாஸ்.
கிஷோர் கே.சுவாமி பேசியது உண்மையிலேயே கருத்துச் சுதந்திரமா? திமுக அரசு செய்வது உண்மையிலேயே ஒடுக்குமுறையா?
’உனது கைகளை வீசும் சுதந்திரம் எனது மூக்கின் நுணியில் முடிவடைகிறது’ என்பது ஆபிரகாம் லிங்கன் காலத்துப் பழமொழி. ஆனால் கழிவுபோல விழுந்த கிஷோரின் பதிவுகள் அத்தனையும் மரியாதை கிலோ என்னவிலை என்று கேட்கும் ரகங்களாகவே இருந்தன. பத்மா சேஷாத்ரி பள்ளியின் முன்னாள் மாணவர், தமிழும் ஆங்கிலமும் சிறப்பாகவே பேசுபவர், வலதுசாரி இண்டலெக்ட் எனச் சுயமாகவே அறிவித்துக் கொண்டவர். இருந்தாலும் கிஷோரின் பதிவுகள் வலது இடது என்று பார்க்காமல் பெண்கள் என்றாலே வக்கிரமாகப் பேசுவது என்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தன. சபை நாகரிகம் கருதி அவற்றைக் குறிப்பிடுவதை இங்கே தவிர்ப்போம்.
பெண்கள் குறித்து அவதூறுகள் பரப்பாத பொழுதுகளில் அம்பேத்கர், அண்ணாதுரை எனத் தலைவர்கள் பக்கம் பாயும் அவர் பேச்சு. அம்பேத்கர் காந்தி காலில் விழுந்து நேரு அமைச்சரவையில் பதவி பெற்றதாகப் பதிவிட்டிருந்தார் கிஷோர். மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையை இரண்டாம் உலகப்போர் காலத்து பிரிட்டிஷ் கைகூலி என விமர்சித்திருந்தார்.
இத்தனை ஏன், கிஷோரின் கைதால் கொந்தளித்திருக்கும் பாஜகவின் வானதி சீனிவாசனை அவரது நடத்தையைக் குறித்துக் கீழ்த்தரமாகப் பலவருடங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார் கிஷோர். அந்தப் பதிவில் கட்சியின் பிற தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் எனப் பாகுபாடில்லாமல் அவமதிக்கப்பட்டிருந்தனர்.
இத்தனைக்குமிடையேதான் கிஷோரின் கைதை அரசியல் அத்துமீறல் என விமர்சனம செய்து வருகிறது பாஜக. அடல் பிகாரி வாஜ்பாய் போன்ற சபை நாகரிகம் தவறாத ஜென்டில்மேன் அரசியல்வாதிகளைத் தலைவர்களாகக் கொண்டிருந்த கட்சியினர், ஆதரவாளர் என்ற காரணத்துக்காகவே கண்மூடித்தனமாக கிஷோர் போன்ற கீழ்த்தரமாகப் பதிவிடுபவர்களை ஆதரிக்க வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.
Also Read: ஆசாராம் முதல் சிவசங்கர் பாபா வரை ..- பாலியல் சர்ச்சை பாபாக்கள் ஒரு ரீவைண்ட்!