தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் நேரடியாக சென்று திமுக, அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறது. மேலும் மாவட்டம் முதல் கிளைக்கழகம் வரை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த மாநில தலைமை உத்தரவிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்பு, எதிர்கட்சிகளின் செல்வாக்கு, தற்போது உள்ள எம்எல்ஏக்களின் பலம், பலவீனம் தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.

Continues below advertisement

ஆர்.கே.நகர் தொகுதி வரலாறு

அந்த வகையில் சென்னையில் முதன்மை தொகுதியாக இருக்கும் தொகுதி ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியாகும்  இந்த தொகுதியில் இருந்து தான் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அவரது மறைவிற்கு பிறகு 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக- அதிமுக இடையே நேரடி போட்டியாக அமைந்தது. திமுக சார்பாக ஜே.ஜே.எபிநேசரும் அதிமுக சார்பாக மாட்ட செயலாளராக இருந்த ராஜேஷ் எதிர்கொண்டனர். இதில் திமுக வேட்பாளர் எபிநேசர் வெற்றி பெற்றார். 

Continues below advertisement

மீண்டும் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன்

இந்த நிலையில் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் மீண்டும் களத்தில் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவாக உள்ள எபிநேசர் மீது அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகளும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவும் அந்த தொகுதியில் பலமில்லாமல் இருப்பதால் அந்த தொகுதியை முதல் சாய்ஸாக டிடிவி தினகரன் குறிவைப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் டிடிவி தினகரனை முதல் முறையாக சட்டமன்றத்திற்கு அனுப்பிய தொகுதியாக ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியானது உள்ளது. எனவே ஆர்.கே.நகர் தொகுதியை ராசியான தொகுதியாக டிடிவி தினகரன் நினைக்கிறார்.  

எனவே டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் பணம் மற்றும் அந்த தொகுதியில் டிடிவி பிரபலமானவர் என்பதால் இவருக்கு டப் கொடுக்கும் வகையில் ஒரு வேட்பாளரை களத்தில் இறக்க திமுக தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே யாரை களத்தில் நிறுத்தலாம் என்ற பட்டியலை திமுக தலைமை ரகசியமாக தேட தொடங்கியுள்ளது. அந்த வகையில் இதில் முதல் ஆளாக ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளராக உள்ள வழக்கறிஞரான எஸ். ஜெபதாஸ் பாண்டியன் பெயர் உள்ளதாக கூறப்படுகிறது.

யார் இந்த ஜெபதாஸ் பாண்டியன்.?

ஜெபதாஸ் பாண்டியன் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான நபர் மட்டுமில்லாமல் பண பலத்திலும் செல்வாக்கு உள்ள நபராக இருப்பதால் இவரை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளராக நிறுத்த ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜெபதாஸ் பாண்டியன் ஆர்.கே.நகர் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும், மழை மற்றும் இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார்.  இருந்த போதும் டாப் 3 பெயர்கள் கொண்ட பட்டியலை திமுக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் இறுதி முடிவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எடுப்பார் என கூறப்படுகிறது. மேலும் ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் அந்த கட்சி என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.