மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சியை கொண்டு சென்னையை அடுத்து மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, எந்த வழியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க வேண்டும், எந்த எந்த வழித்தடம் என திட்டமிடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசிடம் நிதி கோரி தமிழக அரசு பரிந்துரைகளை கொடுத்திருந்தது. ஆனால் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை, மத்திய அரசு நிராகரித்துள்ளது.

Continues below advertisement

மெட்ரோ ரயில் நிராகரித்த மத்திய அரசு

இதற்கு முக்கிய காரணமாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மதுரையில் சுமார் 15 லட்சம் பேரும் , கோயம்புத்தூரில் சுமார் 15.84 லட்சம் மக்கள்  மட்டுமே இருந்தனர் என கூறி, அந்த நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. மேலும் மதுரை மற்றும் கோவை மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். 

பாஜக சதி முறியடிப்போம்

அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு,  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement