நடந்து வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் மஹுவா மொய்த்ரா(Mahua Moitra) பாஜக அரசைக் கடுமையாக சாடியுள்ளார். 


பாஜக அரசு பாராளுமன்றத்தை ரோமின் கொலோசியமாக Rome's Colosseum) மாற்றியுள்ளது. இங்கு பிரதமர் நரேந்திர மோடி 'மோடி, மோடி' என்ற கோஷங்களுக்கு இடையே ஒரு ’கிளாடியேட்டர்’ (gladiator)போல வருகிறார். 


2022-23 ஆம் ஆண்டுக்கான சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில்,  மொய்த்ரா,1972-ல் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துகளைக் குறிப்பிட்ட  பேசினார். அதில், ’இந்தக் காலத்தில், புது டெல்லியில் நிலவும் சூழல் ஒருவரை மூச்சுத் திணற வைக்கிறது.இப்போதெல்லாம் சுதந்திரமாக சுவாசிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. எங்கும் பிரதமரின் பெயர் மட்டுமே உச்சரிக்கப்படுகிறது. அகில இந்திய வானொலியில், காலை முதல் இரவு சினிமா பிரச்சாரம் போல, பிரதமர் பெயர் மட்டுமே அடிக்கடி ஒலிப்பரப்படுகிறது. இப்படியான நிலையில், எதிர்க்கட்சியில்  உள்ளவர்கள் இதை தாண்டி எப்படி ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காக போராட முடியும்?’ என்று வாஜ்பாய் கூறியிருந்தார். 


வாஜ்பாய் பிரதமராக இருந்த கட்சிதான், இன்று இந்த பாராளுமன்றத்தை 1-ஆம் நூற்றாண்டில் ரோமில் உள்ள கொலோசியமாக மாற்றியுள்ளது, இந்தியாவின் மிகப்பெரிய சோகம். மோடி, மோடி என்ற கோஷங்களுக்கு இடையிலேயே நாம் இருக்கிறோம். 


இங்கு மொய்த்ரா குறிப்பிடும் கிளேடியேட்டர் என்பது ரோம் வரலாறுடன் தொடர்பானது. கொலோசியம் என்பது ரோம் நகரில் உள்ள ஒரு சுற்றுலா தலம்.  இது ஒரு நீள் வட்ட வடிவக் கட்டிடம். இதற்குக் கூரை கிடையாது. அந்தக் கால ரோமப் பேரரசில் யாராவது இறந்தால் அந்தச் சவ ஊர்வலத்தின் முன்பு மூன்று சண்டைகள் நடக்கும். அப்படிச் செய்தால்தான் இறந்தவரின் ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கை அப்போது இருந்தது. இதைப் பிற்காலத்திய அரசர்கள் ஒரு விழாவாகக் கொண்டாடத் தொடங்கினர். அடிமைகளும் கைதிகளுமே சண்டையிடுபவர்களாக இருந்தனர். இந்தச் சண்டைக்காகக் கட்டப்பட்டதே கொலோசியம். இதில் சண்டையிடுபவர்கள் கிளாடியேட்டர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவை மக்களுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக இருந்தன. பார்வையாளர்களுக்குத்தான் பொழுதுபோக்கு. பங்கு பெறுபவர்களுக்கு இது உயிரைப் போக்கும் நிகழ்வாக இருக்கும். இதைத் தான் மொய்த்ரா குறிப்பிட்டு பேசியுள்ளார். 


மேலும், ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினராக, இந்த அவையிலும், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து வரலாற்றிலும் "உண்மையில் கைதட்டலுக்குத் தகுதியான சில பெயர்களை உச்சரிக்க" விரும்புவதாக கூறி தங்கள் துறைக்கு பெரும் பங்களிப்பை அளித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார். 






விமானி அனுமதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஊர்மிளா பரேக், முதல் பெண் வணிக விமானி பிரேம் மாத்தூர், இந்திய விமான நிறுவனங்களின் முதல் பெண் விமானி துர்பா பானர்ஜி, போர் மண்டலத்தில் பறந்த முதல் பெண் IAF அதிகாரி குஞ்சன் சக்சேனா, போயிங் விமானத்தின் முதல் கேப்டன், சௌதாமினி தேஷ்முக் மற்றும் சிவில் ஏவியேஷன் வரலாற்றில் மிக இளம் வயது பைலட் பெண்கள் குழுவினை கொண்ட  வணிக ஜெட் விமானத்தை இயக்கும் நிவேதிதா பாசின் ஆகியோரின் பெயர்களைக் கூறினார்.