சேலம் மாவட்டத்தில் பிரதமர் மோடி மதம் குறித்து பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறப்பட்டிருப்பதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
பிரதமர் குறித்து புகார்:
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 19 ஆம் தேதி, சேலம் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் நிகழ்த்திய உரை குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகாரளித்தது.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ள புகாரில், ”பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த மார்ச் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் பிரதமர் மதம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951க்கு எதிராக இருப்பது மட்டுமன்றி, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராகவும் உள்ளது”
பிரதமர் பேசியதாவது,
”இந்தியா கூட்டணி மீண்டும் மீண்டும் வலுக்கட்டாயமாக இந்து மதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இவர்கள் இந்துக்களுக்கு எதிராக சிந்தனைகளை விதைக்கின்றனர். இவர்கள் மற்ற மதங்களுக்கு எதிராக பேசுவதில்லை. ஆனால், எப்பொழுது எல்லாம், இந்துக்களை அவமதிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, ஒரு நிமிடம் கூட வீணாக்குவதில்லை. இதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? எப்படி அனுமதிக்க முடியும் ”
என்று பிரதமர் பேசியதாக புகாரில் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் பேசியது தொடர்பான செய்திகள் மற்றும் ஊடகங்களிலும் நாடு முழுவதும் வெளியானது.
பிரதமர் பேச்சின் செய்திகளை இணைத்துள்ளோம். பிரதமர் உரையானது, இந்தியாவின் மதச்சார்பற்ற குடியரசை தாக்குவது மட்டுமன்றி, தேர்தல் நடைமுறைகளுக்கு எதிராகவும் உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தலைவரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களானது, நாட்டில் மதம் சார்ந்த பதற்றத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற மற்ற பா.ஜ.க. தலைவர்களும் வாக்குக்காக பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆகையால், இது போன்ற பேச்சுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.