சென்னையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாலேயே முக்கியத்துவம் இல்லையென்றாலும் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வந்தார். அதேபோல மறுபுறம் எடப்பாடி பழனிசாமியும் முக்கிய நிர்வாகிகள் உடன் கடந்த 5 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இதனால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என பெரும் எதிர்பார்பார்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஓபிஎஸ் வெளிப்படையாகக் கருத்து கூறி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை. இதனை தொடர்ந்து இருவரும் தொடர்ந்து தனது ஆதர்வாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். 






இந்நிலையில், அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தங்கள் ஆதரவு யாருக்கு? என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதையே சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம். தற்போது அ.தி.மு.க.வில் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள். சட்டமன்றத்தில் ஒரு சிலர் தி.மு.க.வுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள். மற்றொரு பக்கம் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். ஒரு சிலர் தி.மு.க.வை சட்டமன்றத்துக்குள்ளேயே புகழ்வது, புத்தகம் பரிசளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றார். அ.தி.மு.க.வுக்காக உழைக்கக்கூடியவர்கள் ஒரு பக்கமும், ஒட்டு திண்ணையில் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்து இருப்பவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர். குறுக்கு வழியில் பதவியை பெற்று வருகிறார்கள். இதை பார்க்கும் தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்றார்.




பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகிறது. அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கையான தலைவர் இருந்தால் தான் முடியும். எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகளாக முதல்-அமைச்சர் பதவியில் துணிவோடும், தனித்தன்மையோடும் சிறப்பாக ஆட்சியை நடத்தினார். ஆகவே அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். இதுவே எங்களின் விருப்பம் என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண